கெங்கையம்மன் கோவில் புதிய கொடிமரம் கும்பாபிஷேகம்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் புதிய கொடிமரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் 27 ஆண்டுகளுக்கு முன்பாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போது புதிதாக 36 அடி உயரத்தில் கொடிமரம் செய்யப்பட்டு, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கிரேன் உதவியுடன் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கொடி மரத்திற்கு செப்பு தகடுகள் பொருத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று காலையில் புதிய கொடிமரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மகாதேவமலை மகானந்த சித்தர் கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் கெங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்தியானந்தம், நகரமன்ற உறுப்பினர் தேவகி கார்த்திகேயன் உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, கோவில் ஆய்வாளர் பாரி, நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணிக் குழு தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் மற்றும் விழாக் குழுவினர், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.