சேவூர் அழகப்பெருமாள் கோவில் திருப்பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?


சேவூர் அழகப்பெருமாள் கோவில்   திருப்பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
x

சேவூர் அழகப்பெருமாள் கோவில் திருப்பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

திருப்பூர்

சேவூர்

1000 ஆண்டு பழமை வாய்ந்த சேவூர் அழகப்பெருமாள் கோவில் திருப்பணிகள் விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழகப்பெருமாள் கோவில்

அவினாசி அருகே ஆன்மிகத்தலங்களும், வணிக தலங்களும், விவசாயமும் ஒரு காலத்தில் உயர்ந்தோங்கி விளங்கிய பகுதியே செம்பியன் கிழானடிநல்லூர் எனப்பட்ட சேவூர் ஆகும். வரலாற்றில் வட பாரிசார நாட்டின் முக்கியமான பகுதியாக விளங்கியது சேவூர் ஆகும். வடபாரிசாரநாட்டுச் சேவூரின் விண்ணகரம் என்று அழைக்கப்பட்ட கோவிலே அழகப்பெருமாள் கோவில் ஆகும். இக்கோவில் அழகப்பெருமாள் மூலவராக அருள்பாலிக்கும் விண்ணகரம் என்று போற்றப்படும் சிறப்பு பெற்ற தலமாகும். மணவாள ஆழ்வார் மற்றும் நாச்சிமார்களான ஸ்ரீதேவி மற்றும் பூதேவி திருமேனிகளுடன் எழுந்தருளியுள்ள சிறப்பானகோவில் இதுவாகும். நில உரிமை சட்டம் இயற்றப்பட்டது உள்ளிட்ட கல்வெட்டுகள் நிறைந்த கோவிலாகும். தற்போது இக்கோவில் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோவில் என்று அழைக்கப்படுகிறது.

பழமையான கோவில்

1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த இக்கோவில், புரனமைப்பு பணிகள் எதுவும் நடைபெறததால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வசந்த மண்டபம் இடிந்து விழுந்தது. அதை தொடர்ந்து 2005-ம் ஆண்டு இக்கோவில் கட்ட, பழமையான கோவில் இடிக்கப்பட்டு, அர்த்த மண்டபம், மூலஸ்தானம், வசந்த மண்டபம், கருடாழ்வார் மண்டபம், பத்மாவதி தாயார் ஆலயம், அலுமேலு மங்கை தாயார் ஆலயம், தீபஸ்தம்பம், தழுகை தூண் உள்ளிட்ட திருப்பணிகள் செய்வது என ஊர் பொதுமக்கள்,பக்தர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு திருப்பணி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், அப்போதைய அ.தி.மு.க.அரசு திருப்பணிக்காக ரூ.20 லட்சம் வழங்கியது. இதை தொடர்ந்து, மூலஸ்தானம், அர்த்த மண்டபம் அரசு வழங்கிய தொகையில் கட்டப்பட்டது.மேலும், உபயதாரர்களால், மகாமண்டபம்,2 அம்மன் சன்னதிகள், கோவிலின் சுற்று சுவர், நீர் தேக்க மேல்நிலைத்தொட்டி, தீபஸ்தம்பம் ஆகியன அமைக்கப்பட்டது. தற்போது 17 வருடங்கள் ஆகியும் இன்னும் திருப்பணி வேலைகள் முடியாமல் உள்ளது. இன்னும், வசந்த மண்டபம், சொர்க்கவாசல், மற்றும் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறாமல் உள்ளது.

நிதி பற்றாக்குறை

இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:-ஆயிரம் ஆண்டுகளான, பழமை வாய்ந்த பெருமாள் கோவில் 2005-ம் ஆண்டு, இடிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் தொடங்கப்பபட்டது. அரசு வழங்கிய நிதியிலும், உபயதாரர்கள் வழங்கிய நிதியிலும் பணிகள் நடைபெற்றது.இருப்பினும் போதிய நிதிபற்றாக்குறையால், திருப்பணி வேலைகள் தாமதமாகி வருகிறது. பழமை வாய்ந்த இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சேர்ந்த தாகும்.

சேவூரின் முக்கிய பகுதியான, போலீஸ் நிலையம் அருகே கோவில் அமைந்துள்ளது. மேலும் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடைபெற தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கி விரைவில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

===========


Next Story