சேலம் சுகவனேசுவரர் கோவிலில் கும்பாபிஷேக விழா தொடங்கியது நாளை மறுநாள் பூஜைக்கு 54 யாக குண்டங்கள் தயார்
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழாவுக்கான பூஜை தொடங்கியது.
சுகவனேசுவரர் கோவில்
சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவிலில் ரூ.1 கோடியில் திருப்பணிகள் நடந்தது. இந்த பணிகள் நிறைவடைந்து வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
பூஜைக்காக கோவில் பின்புற பகுதியில் 54 யாக குண்டங்கள் தயார் நிலையில் உள்ளன. அங்கு பிரம்மா, நந்தி, அம்மன் உள்ளிட்ட சாமிகளின் சிலைகள், சிவன் படம், 63 நாயன்மார் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. யாக பூஜை நடைபெறும் இடத்தை சுற்றிலும் சுத்தம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பூஜை தொடங்கியது
நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜை தொடங்கியது. இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவரும், சோனா கல்விக்குழும தலைவருமான வள்ளியப்பா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து புனரமைக்கப்பட்ட மடப்பள்ளி திறக்கப்பட்டது. தற்போது தரைக்கற்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் கோவில் உள் பிரகாரத்திற்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடக்கிறது. நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு முதல் கால யாக பூஜை தொடங்குகிறது. 5-ந் தேதி 2-ம் மற்றும் 3-ம் கால யாக பூஜையும், 6-ந் தேதி 4, 5-ம் கால யாக பூஜையும் நடக்கிறது.
கும்பாபிஷேக விழா
வருகிற 7-ந் தேதி காலை 7 மணிக்கு 6-ம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 10.50 மணிக்கு அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கும் சமகால மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11.15 மணிக்கு சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
இதையடுத்து மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா உள்ளிட்டவை நடக்கிறது.