காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை வெட்டிக்கொன்றது ஏன்? கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்


காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை வெட்டிக்கொன்றது ஏன்? கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
x

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை வெட்டிக்கொன்றது ஏன்? என கைதான இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்:-

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை வெட்டிக்கொன்றது ஏன்? என கைதான இருவரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

காதல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே துலுக்கவெளி கிராமம் அய்யாகோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் சரண்யா (வயது 24). இவர், நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.

சரண்யாவின் தாய் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது, திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூரை சேர்ந்த வடிவேல் மகன் மோகன் (31) என்பவரின் தாயாரும் சிகிச்சை பெற்று வந்தார். தங்களது தாய்க்கு உதவியாக சரண்யாவும், மோகனும் இருந்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு அதுவே காதலாக மாறியது.

எதிர்ப்பை மீறி திருமணம்

இவர்களது காதல் விவகாரம் தெரிந்ததால் சரண்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் உறவினர் ஒருவரை சரண்யாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதை அறிந்த சரண்யா தனது காதலர் மோகனை கடந்த 6 நாட்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் செய்து கொண்டார்.

காதலரை திருமணம் செய்த விவரம் அறிந்த சரண்யாவின் சகோதரர் சக்திவேல் அதிர்ச்சி அடைந்தார். புதுமண தம்பதியினரை கொலை செய்ய திட்டமிட்ட அவர், தனது சகோதரியிடம் செல்போன் மூலம் பேசி விருந்துக்கு வருமாறு அழைத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சரண்யா தனது காதல் கணவரை அழைத்துக்கொண்டு சென்னையில் இருந்து துலுக்கவெளி கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்தனர்.

வெட்டிக்கொலை

அப்போது அவர்கள் இருவரையும் சக்திவேல் மற்றும் அவரது உறவினர் ரஞ்சித் ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மற்றும் சோழபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்ட புதுமண தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இருவரது உடல்களும் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பிறகு இருவரது உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

2 பேர் கைது

இந்த கொலை தொடர்பாக சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், ரஞ்சித் ஆகிய 2 இருவரையும் கைது செய்தனர். பின்னர் இவர்கள் இருவரையும் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன் தலைமையிலான போலீசார் திருவிடைமருதூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவர்கள் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து சக்திவேல், ரஞ்சித் ஆகிய இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பரபரப்பு வாக்குமூலம்

கைதான சக்திவேல், ரஞ்சித் ஆகியோர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தனர். போலீசாரிடம் ரஞ்சித் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நானும், சரண்யாவும் உறவினர்கள். நாங்கள் கடந்த 1½ ஆண்டுகளாக பேசி பழகி வந்தோம். இதனால் சரண்யாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். இது குறித்து அவரது அண்ணன் சக்திவேலிடம் கூறியபோது அவரும் சம்மதம் தெரிவித்தார். சரண்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என்ற சந்தோஷத்தில் திளைத்தேன். ஆனால் இடையில் மோகன் புகுந்து சரண்யாவை காதலித்தார்.

இதனால் சரண்யாவை திருமணம் செய்துகொள்ளும் எனது எண்ணம் நடக்காமல் போய் விடுமோ? என அஞ்சினேன். அதன்படியே சரண்யா, மோகனை திருமணம் செய்து கொண்டார். இந்த விவரத்தை அறிந்த எனக்கு ஆத்திரம் மேலும் அதிகரித்தது. இதனால் சக்திவேலிடம் பேசி இருவரும் சேர்ந்து காதல் திருமணம் செய்த புதுமணதம்பதியை தீர்த்து கட்டுவோம் என கூறி அவரது மனதை மாற்றினேன். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து தம்பதியை தீர்த்து கட்டினோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எனது பேச்சை கேட்காததால்...

போலீசாரிடம் சக்திவேல் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது தங்கையும், ரஞ்சித்தும் காதலித்து வந்தனர். ஆனால் சென்னைக்கு சென்ற பின்னர் எனது தங்கை வேறு ஒருவரை காதலித்தது தெரிய வந்ததால் இதை கண்டித்ததுடன், ரஞ்சித்தை திருமணம் செய்து கொள்ளுமாறு எனது தங்கையிடம் வற்புறுத்தி வந்தேன். ஆனால் எனது பேச்சை கேட்காததுடன், எனது எதிர்ப்பையும் மீறி தான் காதலித்தவனை எங்களுக்கு தெரியாமல் எனது தங்கை திருமணம் செய்து கொண்டார். இது எங்களுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் நானும், ரஞ்சித்தும் சேர்ந்து திட்டமிட்டு தந்திரமாக இருவரையும் வரவழைத்து தீர்த்துக்கட்டினோம் என்று கூறியுள்ளார்.


Next Story