குண்டடம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் வரத்து அதிகரிப்பு


குண்டடம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் வரத்து அதிகரிப்பு
x
திருப்பூர்


குண்டடம் வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி ஆடு, கோழிகளின் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

இதனால் ஆடு,கோழி வளர்க்கும் விவசாயிகள் மற்றும் வாங்கி விற்கும் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

குண்டடம் வாரச்சந்தை

இதுகுறித்து ஆடுகளை வாங்கி விற்கும் வியாபாரி கூறியதாவது;-

குண்டடம் வாரச்சந்தையில் சனிக்கிழமை தோறும் அதிகாலை 2 மணி முதல் 8 மணிவரை ஆடு, கோழிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். குண்டடம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து அப்பகுதி வியாபாரிகள், விவசாயிகள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவருகின்றனர்

இவற்றை வாங்க மேச்சேரி, கேரளா, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இவர்கள் இங்கு ஆடுகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காகவும், இறைச்சிக்காகவும் கொண்டு செல்கின்றனர்.

விலை வீழ்ச்சி

தீபாவளியையொட்டி இறைச்சி கடைகளில் விற்பனை அதிகமாக இருக்கும். இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை கொண்டு வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே இறைச்சி விற்பனை குறைவாக இருந்ததால் இறைச்சி விற்பனையாளர்கள் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை

இதனால் கடந்த வாரங்களில் இறைச்சிக்காக வாங்கப்படும் 10 கிலோ எடையுள்ள ஒரு ஆடு ரூ.6 ஆயிரத்துக்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் ரூ.5 ஆயிரத்து 500-க்கு விலைபோனது. ரூ.10 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடுகள் ரூ.9ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.

கோழிகள்

அதேபோல் கோழிகளையும் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணிவரை ஆயிரக்கணக்கான கோழிகள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. கோழிகளை வாங்க தாராபுரம், காங்கயம், பல்லடம் கோவை பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கறிக்கடைக்காரர்கள் நேரடியாக வந்து வாங்கிச்செல்கின்றனர்.

கோழியின் எடைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இறைச்சிக்காக விற்கப்படும் கோழிகள் கடந்த வாரம் 1 கிலோ ரூ.300 முதல் ரூ.330 வரை விலைபோனது. ஆனால் இந்த வாரம் 1 கிலோ ரூ.270 முதல் ரூ.300 வரை விலைபோனது

கட்டுசேவல்கள் விற்பனை ஜோர்

இந்த வாரம் தரமான கருங்கால் பொன்றம், காகம், நூலான், வெள்ளைக்கால் வெள்ளை, கீறி, மயில், வல்லூறு ரகங்கள் வீரியத்துடன் சண்டை போடக்கூடிய சேவல்களை சுமார் 3 கிலோ முதல் 5 கிலோ வரை எடை கொண்ட சேவல்களை சண்டையிட்டு பார்த்து தேர்வு செய்து ரூ.2ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை வாங்கி சென்றனர். நல்ல வீரியத்துடன் சண்டையிடும் சேவல்கள் பண்டிகை களங்களில் நடைபெறும் சேவல் சண்டையில் சுமார் ரூ.1 லட்சம் வரை பந்தயம் கட்டுவதாக கூறப்படுகிறது. குண்டடம் வாரச்சந்தையில் சண்டை பிரியர்கள் சண்டையிட்டு பார்த்து தேர்வு செய்து ஆர்வத்துடன் கட்டு சேவல்களை வாங்கிச்சென்றனர். இதனால் இந்த வாரம் சண்டை சேவல்கள் நல்ல விலைக்கு விற்பனையானது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story