கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா


கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
x
திருப்பூர்


பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கொண்டத்து காளியம்மன்

கொங்கு திருநாட்டில் கருணையின் வடிவமாக, காவல்தெய்வமாக வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து காக்கும் ெகாண்டத்து காளியம்மன் பெருமாநல்லூரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பிரசித்தி பெற்ற இந்த கோவில் குண்டம் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு கொண்டத்துகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் நடந்தது. கடந்த 2-ந்தேதி பக்தர்கள் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் மஞ்சள் நீராடினர். அதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

குண்டம் இறங்கினர்

அவினாசி, குன்னத்தூர், ஊத்துக்குளி, திருப்பூர் மாநகர பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக வந்தனர். திருப்பூர் மத்திய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் திருவிழா நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. குண்டமானது 5 அடி அகலத்தில் 60 அடி நீளம் அமைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக கோவில் பூசாரிகள் குண்டத்திற்கு பூஜை செய்த பின்னர் பூசாரிகள் கை குண்டம் செலுத்தி வழிபட்டனர். அதனை தொடர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பக்தர்கள் குண்டம் இறங்க தொடங்கினர்.

தடுப்புக்கட்டைகளில் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் பயபக்தியுடன் ஓம் சக்தி... பராசக்தி.... என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் மதியம் 12.30 மணிவரைகுண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். குண்டம் இறங்கிய பின் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர். குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு பல்வேறு தன்னார்வலர் அமைப்புகள் அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கினர். குண்டம் முடிந்தபின் பக்தர்கள் குண்டத்தை மூடுவதற்கு உப்பு, மிளகு சாற்றி வணங்கினர்.

குண்டம் திருவிழாவில் திருப்பூர் வடக்கு தொகுதி விஜயகுமார் எம்.எல்.ஏ., சி.பி.எஸ்.இ.பள்ளிகள் கூட்டமைப்பின் அமைப்பான சி.எஸ்.எம்.ஏ.வின் மாநில தலைவரும், கே.எம்.சி. சட்ட கல்லூரியின் ஆலோசகருமான மனோகர், திருமுருகன் கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் ஜி.மோகன், சர்வசக்தி ஜன பேரவை நிறுவன தலைவரும், பிரபல அருள்வாக்கு சித்திரமான ஸ்ரீசிவஸ்ரீ ஆர்.சுரேஷ் சுவாமிகள், பெருமாநல்லூர் ஏ.வி.எஸ்.பள்ளி தலைவரும், தி.மு.க. மாவட்ட நிர்வாகியுமான நந்தகுமார், கனிஷ்கா பில்டர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கனிஷ்கா சிவக்குமார், பெருமாநல்லூர் ஏ.வி.எம். ஏஜென்சி உரிமையாளர் மணி, சர்வசக்தி ஜன பேரவை மாநில துணைப்பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்டத்தலைவர் யுவராஜ், மாவட்ட செயலாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டார்.

கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறையினர் குண்டத்தை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

தேரோட்டம்

குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய நிலையில் மாலையில் தேரோட்டம் நடந்தது. பின்னர் மாலையில் கோவிலில் இருந்து உத்தம லிங்கேஸ்வரர் கோவில் அருகே உள்ள தேருக்கு அம்மன் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து விநாயகர் தேருக்கு பூஜை நடைபெற்ற பக்தர்கள் விநாயகர் தேரை வடம் பிடித்தனர். தொடர்ந்து அம்மன் தேரை 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரத வீதிகளை சுற்றி வந்தது மீண்டும் நிலைக்கு வந்தது.

இதில் கவுமார மடாலய குமரகுருபர சுவாமிகள், அவினாசி காமாட்சிதாச சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் செல்வராஜ், தி.மு.க. மாவட்ட நிர்வாகி திலக்ராஜ் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேர் வலம் வரும் வீதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.


Next Story