அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
அவினாசி காந்திபுரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டும் குண்டம் திருவிழா நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. முன்னதாக கடந்த 9-ந் தேதி இரவு நந்தா தீபா ஆரோகணம், 16-ந் தேதி அம்மன் சாட்சி விழா, 18-ந் தேதி கொடியேற்றம் ஆகியவை நடந்தது. 19-ந் தேதி காலை அழகு தரிசனம் நடந்தது. அன்று இரவு 60 அடி நீளம் உள்ள குண்டத்தில் விறகு முட்டிகள் அடுக்கப்பட்டு அக்னி வளர்க்கப்பட்டது. 12 மணிநேரம் அக்னி வளர்த்த பின்னர் நேற்று காலை குண்டத்தை தட்டி சமன்படுத்தப்பட்டது. பின்னர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு குண்டம் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில்நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.