ஈரோட்டில், சிறுமியின் கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம்: தாய்-வளர்ப்பு தந்தை உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ஈரோட்டில், 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில், 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

4 பேர் கைது

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 16 வயது சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகிய 4 பேர் மீது ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் மருத்துவ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று கருமுட்டை எடுக்கப்பட்ட ஆஸ்பத்திரி விவரங்களை சேகரித்தனர். பின்னர் அந்த ஆஸ்பத்திரிகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

ஆஸ்பத்திரிகளுக்கு சீல்

இதில் சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. விசாரணை முடிந்து மருத்துவ அதிகாரிகள் தங்களது அறிக்கைகளை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதி ஆகிய 2 பேரும் கோவை பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்ட டிரைவர் ஜான் பின்னர் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகள் பெண் புரோக்கர் மாலதிக்கு குறிப்பிட்ட தொகையை அவரது வங்கி கணக்கில் செலுத்தி இருந்தது.

குண்டர் சட்டம் பாய்ந்தது

தனக்கு கிடைத்த பணத்தில் சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்பு தந்தைக்கு ஒரு தொகையை கொடுத்து மீதியை கமிஷனாக அவர் பெற்றுக் கொண்டார். இதன் மூலம் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் ஈரோடு சூரம்பட்டி போலீசார், பெண் புரோக்கர் மாலதியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது குறிப்பிட்ட தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து அவரது வங்கி கணக்கிற்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிந்துரையின் பேரில், சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, டிரைவர் ஜான் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.


Next Story