நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் 33 அடியாக உயர்வு- ஒரே நாளில் 2 அடி அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
குண்டேரிப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 33 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டி.என்.பாளையம்
குண்டேரிப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 33 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குண்டேரிப்பள்ளம் அணை
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த குன்றி மலையடிவாரத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 42 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக குன்றி, மல்லியதுர்க்கம், கடம்பூர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் பெய்யும் மழை நீரானது கல்லூத்து பள்ளம், விளாங்கோம்பை, கம்பனூர் பள்ளம் வழியாக குண்டேரிப்பள்ளம் அணைக்கு வருகிறது. இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், வினோபாநகர், இந்திராநகர், மோதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த அணை வனப்பகுதியில் உள்ளதால் வனவிலங்குகளுக்கும் பயன்பட்டு வருகிறது.
ஒரே நாளில் 2 அடி உயர்வு
கடந்த சில நாட்களாக குண்டேரிப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது.
நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 31 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 95 கன அடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று காலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 33 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 56 கன அடி தண்ணீர் வந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்ததால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு வினோபா நகர், வாணிப்புத்தூர், டி.என்.பாளையம், பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி போன்ற பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.