குன்னத்தூர், மங்கலம் மின்வாரிய கோட்டப்பகுதிகளை திருப்பூர் மின்பகிர்மான வட்டத்துடன் இணைக்க வேண்டும்
குன்னத்தூர், மங்கலம் மின்வாரிய கோட்டப்பகுதிகளை திருப்பூர் மின்பகிர்மான வட்டத்துடன் இணைக்க வேண்டும்
திருப்பூர்
குன்னத்தூர், மங்கலம் மின்வாரிய கோட்டப்பகுதிகளை திருப்பூர் மின்பகிர்மான வட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கடன் தள்ளுபடி
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இடுவாய் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (வயது 15) தனது பாட்டி, சகோதரருடன் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், 'நான் இடுவாயில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். அதன்பிறகு எனது தாயார் ஆதரவில் வாழ்ந்து வந்தோம். பின்னர் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று சொந்தமாக வீடு கட்டினோம். வீடு கிரகபிரவேசத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கச்சென்றபோது எனது தாயார் விபத்தில் இறந்து விட்டார்.
அதன்பிறகு எனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறோம். வீடு கட்டிய வகையில் ரூ.5 லட்சம் கடன் உள்ளது. எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கிறோம். எனவே கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடனை தள்ளுபடி செய்து உதவ வேண்டும். எனது படிப்புக்கு தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
குன்னத்தூர், மங்கலம்
திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் அளித்த மனுவில், 'கரைப்புதூர் கிராமத்தில் எனக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தின் மீது வழக்கு உள்ளது. அப்படி இருக்கையில் அதை போலி ஆவணம் மூலம் ஒருவர் கிரையம் செய்துள்ளார். இதுகுறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் தெரிவித்து விசாரணையில் உள்ளது. விசாரணையை முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். அதை விரைந்து முடித்து தீர்வு காண ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், 'திருப்பூர் மாவட்டம் மங்கலம், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் திருப்பூர் மாவட்டத்துடன் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை மங்கலம், குன்னத்தூர் மின்வாரிய உபகோட்டங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் துணை மின்நிலையங்கள் மட்டும் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள மின்பகிர்மான வட்டங்களில் இருந்து வருகிறது.
மங்கலம் கோவை தெற்கு மின்பகிர்மானத்துடனும், குன்னத்தூர் சுற்றுப்புற பகுதிகள் ஈரோடு மின்பகிர்மானத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. பெருந்துறை மற்றும் சோமனூரில் உள்ள கோட்ட பொறியாளர்கள் கட்டுப்பாட்டில் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. முறைகேடு மின்புகார் குறித்து மங்கலம், குன்னத்தூர் பகுதி மக்கள் கோவை, ஈரோடு அதிகாரிகளை சந்திக்க வேண்டியதால் சிரமம் ஏற்பட்டுள்ளது. விவசாய மின் இணைப்பு பெறுவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. குன்னத்தூர், மங்கலம் பகுதியை திருப்பூர் மின்பகிர்மான வட்டத்துடன் இணைக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
-----------
குறிப்பு படம் உண்டு.
பாட்டியுடன் மனு கொடுக்க வந்த மாணவி