மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்ற குன்றத்துகுமரன், தெய்வானையுடன் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார்- பவளக்கனிவாய் பெருமாளும் இருப்பிடம் வந்தார்
மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்ற முருகப்பெருமான் மதுரையில் இருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு தனது ஊர் வந்து சேர்ந்தார்.அதே சமயம் தங்கை மீனாட்சியை சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு பவளக்கனிவாய் பெருமாளும் தன் இருப்பிடம் வந்தார்.
திருப்பரங்குன்றம்,
மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்ற முருகப்பெருமான் மதுரையில் இருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டு தனது ஊர் வந்து சேர்ந்தார்.அதே சமயம் தங்கை மீனாட்சியை சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டு பவளக்கனிவாய் பெருமாளும் தன் இருப்பிடம் வந்தார்.
மீனாட்சி திருக்கல்யாணம்
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 2-ந்தேதி மீனாட்சிஅம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. இதில் சுந்தரேசுவரருக்கு மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுத்து திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பதற்காக திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் கடந்த 1-ந்தேதி மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
இதே சமயம் தனது தாய்-தந்தையான மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருமணத்தை கண்டு தரிசனம் பெறுவதற்காக தெய்வானையுடன் முருகப்பெருமானும் புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி நடைபெற்ற திருக்கல்யாண வைபோகத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமானும், பவளக்கனிவாய் பெருமாளும் பங்கேற்று சம்பிரதாய சடங்குகளை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பூப்பல்லக்கில் ஊர் திரும்பினர்
மேலும் கடந்த 5 நாட்களாக மதுரையில் தங்கி இருந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மதுரை நகை கடைவீதியில் இருந்து விடைபெற்று தனது இருப்பிடமான திருப்பரங்குன்றத்திற்கு மேளதாளங்கள் முழங்க பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமானும், பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் தனித்தனியாக புறப்பட்டனர். மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் வரையிலுமாக வழிநெடுகிலுமாக பக்தர்கள் திருக்கண்கள் அமைத்து முருகப்பெருமான், பவளக்கனிவாய் பெருமாளை வரவேற்று சாமி கும்பிட்டனர். ஒவ்வொரு திருக்கண்ணிலுமாக சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தவாறு இரவில் கோவிலுக்கு வந்தடைந்தார்.