குட்டை திடலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்
குட்டை திடலில் கொட்டப்பட்டுள்ள குப்ைப அப்புறப்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
குட்டை திடல்
உடுமலை குட்டை திடலில் நூலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாசிப்பதற்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அது மட்டுமின்றி போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளும் நாள்தோறும் வந்து புத்தகங்கள் படித்து குறிப்புகள் எடுத்து வருகின்றனர். இதனால் நூலகம் காலை முதல் மாலை வரையில் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.
நூலகத்தின் சுற்றுச் சுவற்றை ஒட்டியவாறு குப்பைகள் கொட்டப்பட்டு வருவதுடன் ஒரு சிலர் அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால் வாசிப்பதற்காக வருகின்ற பொதுமக்களுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு உடுமலை குட்டை திடலில் கேளிக்கை விளையாட்டுகள் அமைக்கப்பட்டது.
குப்பை
அங்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து சென்றனர்.இதன் காரணமாக குட்டை திடலில் குப்பைகள் அதிக அளவில் சேர்ந்தது. அதனை அப்புறப்படுத்தாமல் நூலகத்தை ஒட்டியவாறு மலைபோல் குவித்து வைத்து உள்ளனர். குட்டைத் திடலை ஏலம் விட்டு வருமானத்தை ஈட்டிய வருவாய்த் துறையும் நகர நிர்வாகத்தை பொறுப்பில் வைத்துள்ள உடுமலை நகராட்சியும் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் மழை பெய்தது.இதன் காரணமாக குப்பைகள் இருந்து எழுகின்ற கடும் துர்நாற்றம் நூலகத்திற்குள் வீசி வருகிறது. இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், பொதுமக்கள் உடல் நலக்கோளாறால் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குட்டை திடலில் உள்ள நூலகத்தின் அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றியும் அங்கு அசுத்தம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.