குரால்நத்தம் பிடாரியம்மன் கோவில் திருவிழா


குரால்நத்தம் பிடாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 6 Nov 2022 1:00 AM IST (Updated: 6 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

குரால்நத்தம் பிடாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

சேலம்

பனமரத்துப்பட்டி:-

பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மன் கோவில் உள்ளது. திப்பம்பட்டி, அத்திப்பட்டி, குள்ளம்பட்டி, முத்தானூர், சூரியூர், குரால்நத்தம் உள்ளிட்ட 8 கிராம மக்களின் காவல் தெய்வமாக பிடாரி அம்மன் கோவில் விளங்கி வருகிறது.

இக்கோவில் திருவிழா நேற்று நடந்தது. காலையில் பிடாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் குள்ளம்பட்டியில் இருந்து ஊர்வலமாக குதிரை அழைத்து வரப்பட்டு, சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. மேலும் விவசாயிகள், தங்கள் விளைவித்த நிலக்கடலை, மிளகாய், அவரைக்காய், வாழைப்பழம், அரளி பூ உள்ளிட்டவை சக்தி அழைப்பு நிகழ்ச்சியில் சூறையிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அலகு குத்தியும், தீ கரகம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் திருமண வரம் வேண்டியும், குழந்தை பேறு வேண்டியும் கோவில் வளாகத்தில் உள்ள ஆச்சா மரத்தில் கயிறு கட்டியும் மற்றும் தொட்டில் கட்டியும் வேண்டுதல் வைத்தனர். வேண்டுதல் நிறைவேறிய பலர் மொட்டை அடித்தும், ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8 மணி அளவில் கருப்பனாருக்கு ரத்தசோறு போடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோவில் வளாகத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து பொங்கல் வைத்து, கிடா வெட்டி அதன் ரத்தத்தை சோற்றில் கலந்து கருப்பனார் சாமிக்கு படையல் நடந்தது. அதன் பின், கோவில் பூசாரி ரத்தம் கலந்து படையல் செய்த சோற்றை புதிய மண் சட்டியில் எடுத்துச் சென்று, ஆச்சா மரத்தின் மேல வீசி விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட்டார். ஆச்சா மரத்தில் இருக்கும் கருப்பனார் சாமி ரத்தம் கலந்த காவு சோற்றை பிடித்துக் கொள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

பிடாரி அம்மன் கோவில் விழாவையொட்டி, சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story