சமூக விரோதிகள் கூடாரமாக மாறும் குறிச்சி மலை: வேட்டையாடப்படுவதால் வனவிலங்குகள் அழியும் அபாயம்- பாதுகாக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


சமூக விரோதிகள் கூடாரமாக மாறும் குறிச்சி மலை: வேட்டையாடப்படுவதால் வனவிலங்குகள் அழியும் அபாயம்- பாதுகாக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x

அம்மாபேட்டை அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் குறிச்சி மலையில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதால் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் குறிச்சி மலையில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதால் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக்கிரமிப்புகள்

அம்மாபேட்டை அருகே உள்ளது குறிச்சி மலை. இது சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட மான்கள் மற்றும் கீரிகள், உடும்புகள், முயல்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் இருந்தன. இந்த மலை வருவாய் துறையின் கட்டுப்பாட்டிலும், வனத்துறையின் பாதுகாப்பிலும் இருந்து வந்தது. தற்போது மலையை சுற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் காட்டில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வப்போது மலையை விட்டு ஊருக்குள் செல்வதால் தெருநாய்கள் கடித்து இறந்து விடுகின்றன. மேலும் குறிச்சி சைபன் அருகே வாய்க்கால் கரையை ஒட்டியுள்ள மலைப் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன் காலை 7 மணி முதல் 11 மணி வரை சட்டவிரோத மது விற்பனை நடக்கிறது.

வனவிலங்குகள் அழியும் அபாயம்

இதுதவிர மலையை சுற்றியுள்ள கல்பாவி, எட்டிக்குட்டை, குறிச்சி உள்ளிட்ட அடிவாரப் பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகிறது. அனுமதி இல்லாமல் மண் அள்ளுவது, மது அருந்திய பின் வனப்பகுதிகளுக்குள் சென்று அங்குள்ள மான், கீரி, முயல், உடும்பு உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி மலைப்பகுதியிலேயே சமைத்து சாப்பிடுவது உள்ளிட்டவை நடந்து வருகிறது. இதனால் வனவிலங்குகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

இந்த மலைப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வந்தன. எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளியவர்களின் வாழ்வாதாரத்துக்காக சிறு குறு விவசாயம் செய்து பிழைப்பு நடத்திக் கொள்ள நிபந்தனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் மலைப்பாங்கான பகுதி யாரும் விவசாயம் செய்யாத நிலையில் அப்படியே இருந்து வந்தது. நிபந்தனை பட்டா பெற்றவர்கள் சிலர் இறந்தும் விட்டனர்.

பாதுகாக்கப்பட வேண்டும்

தற்போது அப்பகுதியை சிலர் விலைக்கு வாங்கியதாக கூறி பல்வேறு ஆக்கிரமிப்புகளை செய்து வருகின்றனர். இதனால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தற்போது ஏராளமான குறைந்துவிட்டன. அதனை பாதுகாக்கும் வனத்துறையினரும் இப்பகுதிக்குள் வருவதில்லை. எனவே குறிச்சி மலைப்பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களிடம் இருந்து காப்பாற்றி பாதுகாக்கப்பட்ட மலையாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினார்கள்.


Next Story