தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்
தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் பல்வேறு வகையான குறிஞ்சி செடிகள் உள்ளன. இதில் ஆண்டுக்கு ஒருமுறை, 3 ஆண்டுக்கு ஒரு முறை, 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலா்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்லட்டி மலைச்சரிவு மற்றும் கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரி பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கின.
இந்நிலையில் தற்போது தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் குறிஞ்சி மலா்கள் நீல நிறத்தில் பூத்துக் குலுங்குகின்றன. அங்கு சின்கோனா பகுதி, தேயிலை தொழிற்சாலை பகுதியிலும் குறிஞ்சி மலா்கள் அதிகமாக காணப்படுகின்றன. தற்போது பூத்து குலுங்கும் மலர்கள் சிறு குறிஞ்சி வகையை சோ்ந்தது. இவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா். ஊட்டியில் தற்போது 2-வது சீசன் களைகட்டி உள்ள நிலையில், தொட்டபெட்டா மலைச்சரிவுகளில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்களை காண சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள் குறிஞ்சி மலர்களை கண்டு ரசிப்பதுடன், அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.