குருத்தோலை ஞாயிறு பவனி


குருத்தோலை ஞாயிறு பவனி
x

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

குருத்தோலை ஞாயிறு

இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், உயிர்த்தெழுதலையும் நினைவூட்டும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். இந்த நாட்களில் அவர்கள் விருந்தோம்பலை தவிர்த்து விரதம் இருந்து வருவார்கள். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை, தவக்கால சிலுவை பயண நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

தவக்காலத்தின் இறுதிவாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடக்க நாளான நேற்று குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

பாளையங்கோட்டை

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற பவனிக்கு பேராலய பங்குத்தந்தை சந்தியாகு வரவேற்றார். தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ், கத்தோலிக்க திருச்சபை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று தேவாலயத்தில் நிறைவடைந்தது. இதேபோல் பாளையங்கோட்டை தெற்கு பஜார் சவேரியார் ஆலயத்தில் இருந்து தொடங்கிய பவனி மிலிட்டரி லைன், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வழியாக மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை, திருப்பலி நடந்தது.

இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் நல்மேய்ப்பர் ஆலயம், பேட்டை அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட நெல்லையில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் ஞாயிறு குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் பேராயர்கள், குருமார்கள், பங்குத்தந்தைகள், இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புனித வெள்ளி

வருகிற 6-ந் தேதி பெரிய வியாழனும், 7-ந் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியும் கடைபிடிக்கப்படுகிறது.

பெரிய வியாழன் அன்று பாதம் கழுவுதல் நிகழ்ச்சி, புனித வெள்ளி அன்று சிலுவை பாதை ஊர்வலம் நடக்கிறது. 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வள்ளியூர்- திசையன்விளை

வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலயத்தில் தவக்கால குருத்தோலை ஞாயிறு சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக குருத்தோலை பவனி நடைபெற்றது. குருத்தோலை பவனியை பேராலய பங்குத்தந்தை ஜான்சன் அடிகளார், மரியதாஸ் அடிகளார், மற்றும் உதவி பங்குத்தந்தை போஸ்கோ அடிகளார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த பவனியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. குருத்தோலை பவனியில் பங்கு இறைமக்கள் மற்றும் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் அதைத்தொடர்ந்து சிறப்பு கூட்டுத் திருப்பலி, தவக்கால தியானம் நடைபெற்றது.

திசையன்விளை- பணகுடி

திசையன்விளையில் ஆர்.சி. கிறிஸ்தவ சபையினரும் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்களும் இணைந்து நடத்திய குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. நேரு திடல் முன்பு இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று உலக ரட்சகர் ஆலயம், சமாரியா தூய யோவான் ஆலயங்களை அடைந்தது. சமாரியா தூய யோவான் ஆலயத்தில் சேகரகுரு செல்வராஜ், உலக ரட்சகர் ஆலயத்தில் பங்குத்தந்தை டக்ளஸ் ஆகியோர் சிறப்பு பிராத்தனையை நடத்தி வைத்தனர்.

பணகுடி புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்கு குரு இருதயராஜ் தலைமையிலும், காவல்கிணறு புனித இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் பங்கு குரு ஆரோக்கியராஜ் தலைமையிலும், பணகுடி அந்திரேயா ஆலயத்தில் சேகரகுரு அகஸ்டின் சாம்ராஜ் தலைமையிலும், லெப்பைகுடியிருப்பு மத்தேயு ஆலயத்தில் சேகரகுரு பாஸ்கரன் தலைமையிலும் குருத்தோலை ஊர்வலம் நடந்தது. களக்காடு கோவில்பத்து சி.எஸ்.ஐ. நியூ சர்ச் சபையின் சார்பில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது.


Next Story