மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் குறுவை நேரடி நெல் விதைப்பு பணிகள் தொடக்கம் -கலெக்டர் தொடங்கி வைப்பு


மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ள நிலையில் குறுவை நேரடி நெல் விதைப்பு பணிகள் தொடக்கம் -கலெக்டர் தொடங்கி வைப்பு
x
தினத்தந்தி 11 Jun 2023 12:45 AM IST (Updated: 11 Jun 2023 10:44 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை நாளை (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ள நிலையில் ஆனைமங்கலம் ஊராட்சியில் குறுவை நேரடி நெல் விதைப்பு பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம்

மேட்டூர் அணை நாளை (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ள நிலையில் ஆனைமங்கலம் ஊராட்சியில் குறுவை நேரடி நெல் விதைப்பு பணியை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

மேட்டூர் அணை நாளை திறப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நாளை (ஜூன் 12-ந் தேதி) தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்த நிலையில் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதி மாவட்டமான நாகை மாவட்டத்தில் விவசாய பணிகளை விவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், கோடை உழவு செய்து விவசாயிகள் தங்களுடைய வயல்களை புழுதி அடித்து தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறுவை நேரடி நெல் விதைப்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆனைமங்கலம் ஊராட்சி மஞ்சவாடி பகுதியில் கோடை உழவு செய்யப்பட்ட நெல் வயலில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் குறுவை விதை நெல் தெளித்து விவசாய பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.

இதற்கான நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் ரவி, தாசில்தார் ரமேஷ்குமார், மண்ணியல் துறை பேராசிரியர் அனுராதா மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவ- மாணவிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

90 சதவீதம் நிறைவு

நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் வாய்க்கால்கள், ஆறுகளை தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள ஏ சேனல், பி சேனல், சி - டி சேனல் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்று, முடிவடையும் நிலையில் உள்ளது.

தற்போது குறுவை நேரடி நெல் விதைப்பு பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் 20 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 15 ஆயிரம் எக்டேர் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story