குறுவள மைய பயிற்சி
குறுவள மைய பயிற்சியை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்
விருதுநகரில் மாவட்ட அளவிலான பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு ஆசிரியர்களுக்கான குறுவள மைய பயிற்சி விருதுநகர் நோபிள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமையிலும், பாளையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் வெள்ளத்துரை முன்னிலையிலும் நடைபெற்றது. பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியர்கள் பயிற்சியை கவனமாக எடுத்துக்கொண்டு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநல மேம்பாட்டுக்கு சரியான வழிகாட்டலை கையாள வேண்டும் என கூறினார். நிறுவன முதல்வர் வெள்ளத்துரை பேசுகையில், கடினமான பாடப்பகுதியை கூட மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் கற்றல் கற்பித்தலை நிகழ்த்த பயிற்சி மூலம் முடியும் என தெரிவித்தார். பயிற்சியின் மூலம் மாணவர்களுக்கு வளரிளம் பருவத்தில் ஏற்படக்கூடிய உடல் ரீதியான மாற்றங்களால் ஏற்படும் மனநல பிரச்சினைக்கு உளவியல் ரீதியாக தீர்ப்பதற்கு குறுவள பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். முடிவில் முதுநிலை விரிவுரையாளர் வேங்கடசாமி நன்றி கூறினார்.