குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் தொடக்கம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப் பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சோழவந்தான்
குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப் பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குருவித்துறை கோவில்
சோழவந்தான் அருகே குருவித்துறையில் சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக இந்த கோவிலில் வீற்றிருக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.
இங்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி நாளை(சனிக்கிழமை) இரவு 11.24 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு இடம் பெயருவதால் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
லட்சார்ச்சனை
இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று காலை 10.45 மணிக்கு மேல் ஸ்ரீதர்பட்டர், ரெங்கநாதபட்டர், சடகோபபட்டர், ஸ்ரீபாலாஜிபட்டர், ராஜாபட்டர், கோபால்பட்டர் உள்பட 12 பேர் லட்சார்ச்சனை நடத்தினர். லட்சார்ச்சனையுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்கியது.
நேற்று வியாழக்கிழமை என்பதால் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசித்தனர். விழாவையொட்டி சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
குருப்பெயர்ச்சி வழிபாடு
நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி லட்சார்ச்சனை நடைபெறும். அதன்பிறகு இரவு 9 மணிக்கு பரிகார மகாயாகம் நடைபெறுகிறது. இரவு 11.24 மணி அளவில் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு குரு ப்பெயர்ச்சி ஆவதால் குரு பகவானுக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் பரிகார யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெறும்.
இதையொட்டி காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய் துறை, தீயணைப்புத் துறை, அரசு போக்குவரத்துதுறை மற்றும் அறநிலையத்துறை குருப்பெயர்ச்சிவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.