குறுவை பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
குறுவை பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தஞ்சையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறுவை பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தஞ்சையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
பூச்சிக்கொல்லி மருந்து
தஞ்சையில் குறுவை சாகுபடிக்கான 7 மாவட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:- கடந்த ஆண்டு சம்பா கொள்முதல் பருவத்தில் மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதால் கொள்முதல் பணிகள் தடையின்றி நடைபெற்றது. அதே போன்று கொள்முதல் செய்யப்படும் நெல்லை உடனுக்குடன் அரவைக்கு அனுப்ப வேண்டும். பூச்சி கொல்லி மருந்துகளை கட்டுப்படுத்த வேண்டும். கடல்முகத்துவாரத்தில் உள்ள ஆறுகளை ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் மூலம் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் ராபி, காரீப் பருவம் என்பது தமிழகத்துக்கு பொருத்தமானதாக இல்லை. எனவே தமிழகத்துக்கு தனியாக சாகுபடி பருவத்தை உருவாக்க வேண்டும். தூர்வாரும் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி குறைவாக உள்ளது. இதனை அதிகப்படுத்த வேண்டும்.
இடுபொருட்கள் விலை கடும் உயர்வு
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன்:- குறுவை சாகுபடிக்கான இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இது ஏமாற்றத்தை அளிக்கிறது. குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் அதிகாரம் தலைதூக்குவதை கட்டப்படுத்த வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வழங்குவதில் முறைகேடு நடைபெறுகிறது. எனவே காலதாமதம் செய்யாமல் பயிர்க்கடன் வழங்க வேண்டும். ஆதார் அட்டைக்கு விதை நெல் 100 கிலோ வழங்க வேண்டும். ஆதார் அட்டைக்கு உரம் பெறுவதில் அளவீடு இல்லாமல் தேவைப்படும் உரங்களை வழங்க வேண்டும். குறுவை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அதிகாரி அடங்கல் வழங்க வேண்டும்.
காவிரி விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர்:- தூர்வாரும் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை. எனவே அறுவடை முடிந்து ஒரு மாத காலத்திற்குள் இழப்பீடு தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் 21 சதவீதம் என்பதை நிரந்தரமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு பியிர்க்கடன் தாமதம் இன்றி வழங்க வேண்டும்.
பயிர்க்காப்பீடு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார்:- குறுவை பயிர்கள் தொடர்ச்சியாக இயற்கை இடர்பாடுகளால் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் குறுவை பயிர்களுக்கான காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பயிர்க்காப்பீடு நிறுவனம் முன்வராத நிலையில் தமிழக அரசே பயிர்க்காப்பீடு நிறுவனத்தை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை நிர்ணயிக்க வேண்டும். குறுவை நெல் கொள்முதல் ஈரப்பத தளர்வை மத்திய அரசிடம் நிரந்தரமாக பெற்று கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும் விவசாயிகள் பேசுகையில், குறுவை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் கடன் வழங்க வேண்டும். அதேபோல் தேவையான அளவு விதைகள், உரங்கள் ஆகியவற்றை அதிக அளவில் இருப்பு வைத்து வினியோகம் செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க மாநில அரசு ஒதுக்கீடு செய்யப்படும் தொகை என்பது தமிழகத்தில் சாகுபடி பரப்பளவின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அறுவடை எந்திரங்கள்
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடைக்கான எந்திரம் போதுமானதாக இல்லை. வெளி மாவட்டங்களிலிருந்து வரவழைக்க வேண்டி இருக்கிறது. எனவே டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக அறுவடை எந்திரங்கள், நடவு எந்திரங்கள் வேளாண்மைத்துறைக்கு வழங்க வேண்டும். தாட்கோ மூலம் அறுவடை எந்திரங்கள் வாங்க இளைஞர்களுக்கு கடனுதவி அளிக்க வேண்டும். மழை, வறட்சியை தாங்கி நிற்ககூடிய புதிய நெல் ரகங்களை வேளாண் பல்கலைக் கழகங்கள், நெல் ஆராய்ச்சி நிலையங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.என்றனர்.