புதுவகை கொரோனா பரவுவதை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்


புதுவகை கொரோனா பரவுவதை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
x
திருப்பூர்


புதுவகை கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

புதுவகை கொரோனா வைரஸ்

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது. இந்த வைரஸ் தொற்று பரவுவதைத்தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத்தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டன. இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகரித்துவரும் ஒமைக்ரான் பி.எப்-7என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிற்குள்ளும் புகுந்துள்ளது.

ஆலோசனை கூட்டம்

இதைத்தொடர்ந்து இந்த புதியவகை வைரஸ் தொற்று பரவுவதைத்தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மு.மத்தீன் தலைமை தாங்கிபேசினார்.

நகராட்சி ஆணையாளர் ப.சத்தியநாதன், துணைத்தலைவர் எஸ்.கலைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். கூட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் டாக்டர் சந்திரசேகர், காவல் துறை சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், தீயணைப்பு துறை சார்பில் தாமோதரன், கல்வி துறை சார்பில் சண்முகசுந்தரம்மற்றும் நகராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகக்கவசம் அணிய அறிவுரை

கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளைத்தொடர்ந்து நகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.

ஒமைக்ரான் பி.எப்-7 என்ற வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள், மருத்துவ மனைகள், திருமண மண்டபங்கள், பஸ்நிலையம் உள்ளிட்டு பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்துசெல்லும் இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், அடிக்கடி கைகளை கழுவவும், கிருமி நாசினியை பயன்படுத்தவும், வாரத்திற்கு ஒருமுறை கபசுர குடிநீர் அருந்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத்தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் வகையில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.


Next Story