சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்திருவிழா ஆலோசனைக்கூட்டம்
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தை மாத தொடக்கத்தில் சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் தமிழர் திருநாள் திருவிழா நடைபெறுகிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். இதனைக் கருத்தில் கொண்டு விழாவுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் ஜலஜா, தாசில்தார் கண்ணாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆல்கொண்டமால் கோவில் செயல் அலுவலர் ராமசாமி, சோமவாரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் விமலா சவுந்திரராஜன் மற்றும் வருவாய், உள்ளாட்சி, மருத்துவம், தீயணைப்பு, போக்குவரத்து, இந்து அறநிலையத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.