38 சதவீதம் தையல் கூலி உயர்வு ஒப்பந்தம்
திருப்பூர்,
38 சதவீதம் தையல் கூலி உயர்வு ஒப்பந்தம் சைமா-பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினருக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.
தையல் கூலி உயர்வு
பவர் டேபிள் தையல் கூலி உயர்வு பேச்சுவார்த்தை சைமா சங்கத்துடன் நடந்து வந்தது. 4 ஆண்டுகளில் முதலாம் ஆண்டு 20 சதவீதம், மீதம் உள்ள 3 ஆண்டுகள் தலா 10 சதவீதம் கூலி உயர்வு வழங்குமாறு பவர் டேபிள் உரிமையாளர் சங்கத்தினர், சைமா சங்கத்தினருக்கு தெரிவித்தனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
கடந்த 8 கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்தது. இதன்காரணமாக பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் நிர்வாக குழு கூட்டம் நடத்தி, இந்த மாதம் 10-ந் தேதிக்குள் உடன்பாடு ஏற்படாவிட்டால் உற்பத்தியை நிறுத்திக்கொள்வது என்று முடிவு செய்து அறிவித்தனர்.
9-வது கட்ட பேச்சுவார்த்தை
இந்தநிலையில் கூலி உயர்வு சம்பந்தமாக 9-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று மாலை சைமா அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. சைமா சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கோவிந்தசாமி, ராமசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பவர் டேபிள் உரிமையாளர் சங்க தலைவர் நந்தகோபால், செயலாளர் முருகேசன், துணை தலைவர் நாகராஜ், பொருளாளர் சுந்தரம், துணை செயலாளர் பழனிசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, தனசேகர், மயில்சாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
38 சதவீதம் கூலி உயர்வு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் கூலி உயர்வு ஒப்பந்தம் குறித்து இரு சங்கத்தினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, பனியன் ரகத்துக்கு இந்த ஆண்டு 17 சதவீதம், அடுத்த 3 ஆண்டுகள் தலா 7 சதவீதம் என 38 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என்று ஒப்பந்தம் ஆனது.
அதுபோல் பேக்பட்டி டிராயர், பேக்பட்டி டபுள், பாக்கெட் டிராயர் ஜட்டி ரகங்களுக்கு இந்த ஆண்டு 14 சதவீதம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் என 35 சதவீதம் ஒப்பந்தம் ஆனது. அதாவது இந்த கூலி உயர்வு ஒப்பந்தம் நாளை (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படும். நாளை முதல் எடுக்கும் கட்டுகளுக்கு இந்த கூலி உயர்வு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 2025-ம் ஆண்டு வரை கூலி உயர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரணமாக டஜனுக்கு ரூ.6 கழித்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.