பருவம் வந்த பின்பும் பூக்காத அவரை செடிகள்
தேவாரம் அருகே பருவம் வந்த பின்பும் பூக்காத அவரை செடிகள் குறித்து ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம், டி.புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாய பணிகள் நடக்கின்றன. இங்கு மானாவாரி விவசாயமும் அதிக அளவில் நடக்கிறது. பல்வேறு காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அவரை சாகுபடியில் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் விதைகள் வாங்கி விதைத்தனர். அவை நன்கு வளர்ச்சி அடைந்தன. பூக்கள் பூக்கும் பருவம் வந்த போதிலும் பூக்கள் பூக்காமல் உள்ளது. சில வயல்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட செடிகள் பூக்காமல், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பூக்கள் பூத்துள்ளன.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, "விவசாயிகள் தனியார் நிறுவனத்தின் விதைகளை வாங்கி பயன்படுத்தினோம். அரசு சான்று பெற்ற விதை என்றே அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பூக்கும் பருவம் வந்தபோதிலும் 50 சதவீத்துக்கும் மேற்பட்ட செடிகள் பூக்கவில்லை. அவை மலட்டுச் செடிகளாக உள்ளன. உழவுப்பணி, விதைகள், விதைத்தல், களை எடுத்தல், உரம் இடுதல் என ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். அவ்வளவு செய்தும் மகசூல் கிடைக்கவில்லை. வேறு சில விவசாயிகள் வேறு நிறுவன விதைகளை வாங்கி பயன்படுத்தினர். அவை நன்கு வளர்ந்து காய்கள் விளைச்சல் அடைந்துள்ளன. எனவே அதிகாரிகள் இப்பகுதிக்கு வந்து நேரில் ஆய்வு செய்து, சாகுபடி பாதிப்புக்கான காரணம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விதைக்க பயன்படுத்திய விதைகள் தரமற்றதாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே உரிய ஆய்வுகள் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.