58 கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
58 கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் சட்டமுறை எடையளவுகள் (பொட்டல பொருட்கள்) விதிகள் சட்டத்தின் கீழ் பெரம்பலூர் மற்றும் அரியலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி தலைமையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அலுவலர்கள் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஜவுளிக்கடைகள், ஆயத்த ஆடைகள் விற்பனை கடைகள், இனிப்பகங்கள், பேக்கரிகள் உள்பட 58 கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். இதில் 12 கடைகளில் சட்டமுறை எடையளவு சட்டவிதிகளை பின்பற்றாமல், முரண்பாட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, விதிமுறையை மீறி செயல்பட்ட இந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எடையளவு சட்டமுறையை கடைவியாபாரிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். பொட்டலமிடுபவர்கள் உரிமம் பெறாமல் பொட்டலமிட்டு விற்பனை செய்யக்கூடாது. விதிமுறையை மீறும் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.