மேட்டூர் பகுதியில் மீன், இறைச்சி கடைகளில்தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு
மேட்டூர் பகுதியில் மீன், இறைச்சி கடைகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது, 47 இரும்பு எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகாரிகள் ஆய்வு
சேலம் தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் அறிவுரையின்படி சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் அதிகாரிகள் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீன், இறைச்சி கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, எடை குறைவு, முத்திரை, மறுமுத்திரையிடப்படாத எடையளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகள், மறுபரிசீலனை சான்றுகாட்டி வைக்கப்படாமை, சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காதது ஆகியவை குறித்து அதிகாரிகள் பார்வையிட்டனர்.
47 இரும்பு எடைக்கற்கள் பறிமுதல்
இந்த ஆய்வின்போது, மீன் மற்றும் இறைச்சிக்கடைகளில் முத்திரை இல்லாத, மறுமுத்திரையிடப்படாத, தரப்படுத்தப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள், விட்ட தராசுகள்-21 மற்றும் அரசு முத்திரை இல்லாமல் வணிகர்கள் பயன்படுத்திய 47 இரும்பு எடைக்கற்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. எனவே அனைத்து மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் வணிகர்கள், இதுவரை முத்திரையிடப்படாமல் பயன்படுத்தும் எடையளவுகளை அந்தந்த பகுதிகளுக்கான முத்திரை ஆய்வாளர் அலுவலகங்களுக்கு சென்று முத்திரையிட்டு கொள்ள வேண்டும்.
பயன்படுத்த முடியாத எடையளவுகளை கழித்துவிட்டு புதியதை வாங்கி பயன்படுத்த வேண்டும். வணிகர்கள் பயன்படுத்தி வரும் எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறுமுத்திரையிடப்படாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், அனைத்து வணிகர்களும் நுகர்வோர் நலன்கருதி முத்திரையிடப்பட்ட சோதனை எடைக்கற்கள் வைத்திருக்க வேண்டும் எனவும் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.