முத்திரை இல்லாத தராசுகள் பயன்பாடு குறித்து இறைச்சி, மீன் கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு


முத்திரை இல்லாத தராசுகள் பயன்பாடு குறித்து இறைச்சி, மீன் கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு
x

ஆத்தூர் பகுதியில் முத்திரை இல்லாத தராசுகள் பயன்பாடு குறித்து இறைச்சி, மீன் கடைகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சேலம்

அதிகாரிகள் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் முத்திரையிடப்படாத எடைக்கற்கள் மற்றும் மின்னணு தராசுகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில், சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் துணை ஆய்வாளர்கள் பாலசுப்ரமணியன், குருபிரசாத், உதவி ஆய்வாளர்கள் சிவகுமார், முருகானந்தம், இளையராஜா, முத்திரை ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர். மேலும், எடையளவுகள் பழுதுபார்ப்போர், விற்பனை செய்வோர்கள் கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எடைக்கற்கள் பறிமுதல்

அப்போது, எடை குறைவு, முத்திரையிடப்படாதது, மறுமுத்திரையிடப்படாத எடையளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடையளவுகள், மறுபரிசீலனை சான்றுகாட்டி வைக்கப்படாதது, எடையளவுகள் பழுதுபார்ப்போர், விற்பனை செய்வோர் முறையாக பதிவேடுகள் பராமரிக்கின்றனரா? முத்திரையிடப்பட்ட எடையளவுகளை தான் விற்பனை செய்கிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின்போது, மீன் மற்றும் இறைச்சி கடைகளில் முத்திரை இல்லாத, மறுமுத்திரையிடப்படாத, தரப்படுத்தப்படாத 17 மின்னணு தராசுகள், 3 விட்ட தராசுகள், அரசு முத்திரை இல்லாமல் வணிகர்கள் பயன்படுத்திய 19 இரும்பு எடைக்கற்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இந்த ஆய்வில், 27 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு 7 கடைகள் மற்றும் நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அபராதம்

எனவே, அனைத்து மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் வணிகர்கள், இதுவரை முத்திரையிடப்படாமல் பயன்படுத்தும் எடையளவுகளை அந்தந்த பகுதிகளுக்கான முத்திரை ஆய்வாளர் அலுவலகங்களுக்கு சென்று முத்திரையிட்டு கொள்ள வேண்டும்.

வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறுமுத்திரையிடப்படாமல் இருந்தால் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.


Next Story