தொழிலாளிக்கு கத்திக்குத்து; சிறுவன் உள்பட 5 பேர் கைது
குடவாசல் அருகே இடப்பிரச்சினையில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல் அருகே இடப்பிரச்சினையில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இடப்பிரச்சினை
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள தாழ்ப்பாள் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது26). விவசாய தொழிலாளி. இதே தெருவில் வசிப்பவர் அன்பழகன். இவர் மணிகண்டனின் சித்தப்பா வீட்டு அருகில் அரசு சார்பில் வழங்கப்பட்ட வீட்டை கட்ட தொடங்கி உள்ளார். அப்போது வீரபாண்டியன், 'வீடு கட்டும் இடத்தை அளந்து எங்கள் இடத்தை ஒதுக்கி விட்டு வீடு கட்டலாம்' என கூறி உள்ளார்.
இதை கேட்காமல் அன்பழகன் வீடு கட்ட முயன்ற போது வீரபாண்டியன், மணிகண்டன் உள்ளிட்டோர் தடுத்தனர்.
கத்திக்குத்து
இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த குமார் (42), அன்பழகன் மகன்கள் அஜித்குமார் (23), அருண்குமார் (21), குமார் மனைவி குணசுந்தரி (38) மற்றும் 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் வீரபாண்டியன், மணிகண்டன் உள்ளிட்டோரை கத்தி, கட்டையால் தாக்கினர். இதில் மணிகண்டனை குமார் கத்தியால் வயிற்றில் குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் குடவாசல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகன்யா, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கமலநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து குமார், அஜித்குமார், அருண்குமார், குணசுந்தரி மற்றும் 15 வயது சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர். வழக்கு தொடர்பாக அன்பழகனை போலீசார் வலைவவீசி தேடி வருகிறார்கள்.