பாம்பு கடித்து கூலித்தொழிலாளி பலி
அணைக்கட்டை அடுத்த அல்லேரி மலை கிராமத்தில் பாம்பு கடித்து தொழிலாளி இறந்தார். சாலை வசதி ஏற்படுத்தக்கோரி பிணத்துடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாம்பு கடித்தது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரியை அடுத்த ஆட்டுக்காரன் தொரைமலை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 38) கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சங்கர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு சங்கரின் கையில் சுற்றிக்கொண்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாம்பின் பிடியிலிருந்து கையை எடுக்க முயன்ற போது கையில் 2 முறை கடித்தது. வலி தாங்க முடியாமல் கூச்சலிட்ட சங்கரின் அலறல் சத்தம் கேட்டு, மனைவி மற்றும் மகள்கள் எழுந்து கட்டுவிரியன் பாம்பை அடித்துக் கொன்றனர்.
சாவு
இது குறித்து கிராமத்தினர் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அதன்படி ஆம்புலன்சுடன் மருத்துவ குழுவினர் அல்லேரியில் வந்து தயார் நிலையில் காத்திருந்தனர்.
ஆட்டுக்காரன் தொரை மலை கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்லேரிக்கு பாம்பு கடித்த சங்கரை அந்த கிராமத்தினர் டோலி கட்டி தூக்கி வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து கிராம மக்கள் இறந்துபோன சங்கரின் உடலை தங்கள் கிராமத்திற்கு திருப்பி எடுத்துச் சென்றனர்.
பிணத்துடன் மறியல்
அங்கு சங்கரின் பிணத்துடன், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பீஞ்சமந்தை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கம்சலா சுந்தரேசன் மற்றும் அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில்ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அதன் பின்னர் போலீசார், சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அத்திமரத்துகொல்லை மலை கிராமத்தை சேர்ந்த விஜய்- பிரியா தம்பதியரின் 1½ வயது மகள் தனுஷ்காவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்தது. சிறுமியை ஆஸ்பத்திரிக்கு நடந்தே அழைத்து சென்றபோது இறந்தது குறிப்பிடத்தக்கது.