அம்மிக்கல்லை போட்டு தொழிலாளி கொலை: 'குடிபோதையில் உல்லாசத்துக்கு அழைத்து தொந்தரவு செய்ததால் தீர்த்துக்கட்டினேன்'-கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்
குடிபோதையில் உல்லாசத்துக்கு அழைத்து தொந்தரவு செய்ததால் அம்மிக்கல்லை தலையில் போட்டு தொழிலாளியை தீர்த்துக்கட்டியதாக கைதான மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சூரமங்கலம்:
தொழிலாளி கொலை
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர்ரெட்டிப்பட்டி ஓடை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மணிமேகலை (27). இவர் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு வெற்றிவேல் என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர்.
ரமேஷ் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த மணிமேகலை கடந்த 15-ந் தேதி குடிபோதையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். பின்னர் அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
பரபரப்பு வாக்குமூலம்
இதையடுத்து மணிமேகலையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறேன். எனது கணவர் ரமேஷ் தினமும் மது குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துவார். அதிக போதையில் இருக்கும் போது என்னை உல்லாசத்துக்கு அழைத்து தொந்தரவு கொடுப்பார். இதற்கு மறுத்தால் வேறு ஒருவருடன் இணைத்து என்னை தவறாக பேசுவார். சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வந்த அவர், வீட்டிலும் மீண்டும் குடித்தார்.
பாழாகிவிடும்
பின்னர் என்னிடம் தகராறு செய்தார். இதனால் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இப்படிப்பட்ட கணவரிடம் வாழ்க்கையை தொடர்ந்து நடத்தினால் எனது வாழ்க்கையும், குழந்தைகளின் எதிர்காலமும் பாழாகிவிடும் என்று கருதினேன்.
இதனால் கணவரை கொலை செய்ய தீர்மானித்தேன். பின்னர் போதையில் தூங்கி கொண்டிருந்த கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு தீர்த்துக்கட்டினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து மணிமேகலையை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.