கரும்பு சாகுபடியில் வெட்டாட்கள் எனப்படும் அறுவடைத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரும்பு சாகுபடியில் வெட்டாட்கள் எனப்படும் அறுவடைத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
போடிப்பட்டி,
கரும்பு சாகுபடியில் வெட்டாட்கள் எனப்படும் அறுவடைத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமராவதி சர்க்கரை ஆலை
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு தென்னை, வாழை, கரும்பு, நெல், மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறுவிதமான பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் ஆண்டுப் பயிரான கரும்புப் பயிர் சாகுபடி படிப்படியாக குறைந்து வருகிறது.
இதற்கு போதிய விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் வெட்டாட்கள் எனப்படும் அறுவடைத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மிக முக்கிய காரணமாக உள்ளது. இவர்களே அமராவதி சர்க்கரை ஆலையின் இயக்கத்தை தீர்மானிக்கும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இழப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
'உடுமலை, மடத்துக்குளம், குமரலிங்கம், தாராபுரம், பழனி, நெய்க்காரப்பட்டி, ஓட்டன்சத்திரம், பல்லடம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் அமராவதி சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கி வருகிறார்கள். சரியான பருவத்தில் கரும்புகளை அறுவடை செய்தால் மட்டுமே அதிக சர்க்கரை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த பகுதிகளில் கரும்பு அறுவடை செய்து வந்த உள்ளூர் பணியாளர்கள் பலரும் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர்.
இதனால் தஞ்சாவூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து அறுவடை செய்ய வேண்டிய நிலை உள்ளது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து தொழிலாளர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் அந்தந்த ஊர்களிலுள்ள சீசன் முடிந்த பிறகே இங்கு வருவதால் அறுவடை தாமதமாவதால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படுகிறது.
அறுவடை எந்திரங்கள்
கடந்த ஆண்டில் உரிய பருவத்தில் அறுவடை செய்யாததால் கரும்புக் காட்டையே ஒரு விவசாயி தீ வைத்து அழித்ததாக வேதனை தெரிவித்துள்ளார். இதனால் சர்க்கரை ஆலைக்கு போதுமான கரும்பு உரிய நேரத்தில் கிடைக்காததால் சீராக இயக்க முடியாமல் கூடுதல் செலவு ஏற்படுகிறது. வெட்டு கூலியாக கடந்த ஆண்டில் ஒரு டன்னுக்கு ரூ.850 நிர்ணயம் செய்யப்பட்டது. தொழிலாளர்கள் ரூ.1000-க்கு மேல் வசூல் செய்தனர். ஒரு டன் கரும்பு ஆலை நிர்வாகத்தால் ரூ.3 ஆயிரத்துக்கு வாங்கப்படும் நிலையில் கூலியாகவே ரூ.1000 கொடுக்க வேண்டியதுள்ளது.
கரும்புக்கான பணத்தைபெற மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியதுள்ளது. தனியார் வியாபாரிகள் முன்பணம் கொடுத்து ஒரு டன் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்ய தயாராக உள்ளனர். எனவே பல விவசாயிகள் தனியார் நிறுவனங்களை நாடிச்சென்று விட்டனர். ஒருசில பகுதிகளில் கரும்பு அறுவடைக்கு நவீன எந்திரங்களை பயன்படுத்துகின்றனர். 4 அடி பார் அமைத்து நடவு செய்யும் கரும்பு வயல்களில் மட்டுமே எந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய முடியும். பெரும்பாலான சிறு விவசாயிகள் 3½ அடி பார் அமைத்து சாகுபடி செய்வதால் எந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய முடிவதில்லை.
எனவே வெட்டாட்கள் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அறுவடை எந்திரங்களில் 3½ அடி பார் அமைத்துள்ள பகுதிகளிலும் அறுவடை செய்யும் வகையில் மாற்றங்கள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு கரும்பு அறுவடைக்கான பயிற்சிகள் வழங்கி அவர்களை அறுவடைக்கு பயன்படுத்துவது குறித்த சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ஆட்கள் பற்றாக்குறை நீடித்தால் கரும்பு விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்படும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை காப்பாற்றுவது கடினமானதாக மாறி விடும்.'
இ்வ்வாறு விவசாயிகள் கூறினர்.
------------------
3 காலம்
மடத்துக்குளம் பகுதியில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.