சுதந்திர தினத்தை கொண்டாட தொழிலாளர்துறை வலியுறுத்தல்


சுதந்திர தினத்தை கொண்டாட தொழிலாளர்துறை வலியுறுத்தல்
x

மதுரை மண்டலத்திற்கு உள்பட்ட மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகளில் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று தொழிலாளர் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மதுரை


மதுரை மண்டலத்திற்கு உள்பட்ட மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகளில் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று தொழிலாளர் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

சுதந்திர தின விழா

தமிழக தொழிலாளர் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர், முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர் அறிவுரைப்படி, மதுரை கூடுதல் கமிஷனர் குமரன் வழிகாட்டுதலின் படி 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.

மதுரை மண்டல, இணை கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த கடைகள், வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள், ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழக அரசின் உத்தரவுப்படி, வருகிற 15-ந் தேதி 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழா அனைத்து தரப்பினரும் கொண்டாட வேண்டும். எனவே, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர், ஆஸ்பத்திரிகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் ஆகியவற்றிலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வீடுகளிலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை தேசியக்கொடி ஏற்றி வைக்க வேண்டும்.

அன்றைய நாட்களில், விளம்பர பலகைகளில் மூவர்ணம் இருக்க வேண்டும். பணியாளர்கள் தேசியக்கொடி அணிந்து பணியாற்ற வேண்டும். நிறுவனத்தின் வலைத்தளங்களில் முகப்பு பக்கத்தில் தேசியக்கொடியை பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வெளி மாநில தொழிலாளர்கள்

அத்துடன், வெளிமாநில தொழிலாளர்களின் பணி நிலைமை மற்றும் நலன்களை முறைப்படுத்தும் வகையில், வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள நிறுவன உரிமையாளர்கள், அவர்களின் பெயர், ஆதார் எண், செல்போன் எண், தொழிலாளி சார்ந்துள்ள மாநிலத்தில் உள்ள வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களை தொழிலாளர் துறை இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு கால பலன்களை வழங்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது.

இருக்கை வசதி

துணை கமிஷனரிடம் ஆன்லைனில், பணி நியமனம் குறித்து பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர் உதவி கமிஷனரிடம் (அமலாக்கம்) உரிமம் பெற வேண்டும். கடைகள், நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு 8 மணி நேர வேலையின் போது, உட்கார்ந்து பணியாற்ற வசதியாக இருக்கை வசதி செய்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


Next Story