யூரியா உள்ளிட்ட உரம் தட்டுப்பாடு
கடலூர் மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், வேளாண்மை இணை இயக்குனர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-
தடுப்பணை
செந்தில்முருகன் (விவசாயி) :- பெருந்துறையில் தடுப்பணை சரியான முறையில் அமைக்கவில்லை. இதனால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. இதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை அதிகாரி:- நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்படும்.
பரமசிவம் (விவசாயி) :- நல்லூர் ஒன்றிய பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம், கரும்பு, நெல், வாழை பயிரிட்டுள்ளனர். ஆனால் அவற்றை காட்டுபன்றிகள் வீணாக்கி வருகிறது. குரங்குகள் தொல்லையும் அதிகமாக இருக்கிறது. ஆகவே வனத்துறையினர் காட்டு பன்றிகளை, குரங்குகளை பிடிக்க வேண்டும்.
வேளாண்மை அதிகாரி:- பன்றிகள் வயல்வெளிக்கு வராத வகையில் மருந்து உள்ளது. அதை தெளித்தால் பன்றிகள் வராது என்றார்.
இதை கேட்ட விவசாயிகள், அந்த மருந்து பற்றி விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள், ஏதாவது ஒரு நாளில் செயல்விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
மகாராஜன் (விவசாயி) :- வெலிங்டன் ஏரி முழுமையாக நிரம்பி வருகிறது. ஆகவே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். அதற்குள் கிளை வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும்.
நிவாரணம்
மாதவன் (விவசாய சங்க தலைவர்):- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அடுத்ததாக பயிர் செய்வதற்கு தேவையான உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் யூரியா உள்ளிட்ட உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
தேவநாதன் (விவசாயி) :- பண்ருட்டி பகுதியில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிட தோட்டக்கலை துறை அதிகாரிகள் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உரம் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், உரத்தின் விலையை அதிகமாக விற்கிறார்கள். அரசே விலை நிர்ணயம் செய்து அறிவித்தால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாகஇருக்கும்.
செல்வராஜ் (விவசாயி) :- ஸ்ரீமுஷ்ணம் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 14,521 உறுப்பினர்களை கொண்ட பெரிய வங்கி. இதை 3 கிளையாக பிரித்தால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
கலெக்டர்:- இது பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கலெக்டரிடம் முறையீடு
முன்னதாக கூட்டம் தொடங்கும் போது, கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், தீர்வு காணப்பட்ட மனுக்களின் விவரங்களின் பட்டியல் வாசிக்கப்பட்டது. இதை கேட்ட, விவசாயி வேங்கடபதி, நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கவில்லை. இகுறித்து கேட்கப்படும் எந்த கேள்விக்கும் சர்க்கரை ஆலையும், அதிகாரிகளும் பதில் அளிப்பதில்லை என்றார். அவருடன் மற்ற விவசாயிகளும் கலெக்டர் அருகில் திரண்டு முறையிட்டனர். அவர்களை கலெக்டர் சமாதானம் செய்து அனுப்பினார். இருப்பினும் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.