பள்ளியில் சுகாதார வளாகம் பற்றாக்குறை; மாணவர்கள் அவதி
பள்ளியில் சுகாதார வளாகம் பற்றாக்குறை; மாணவர்கள் அவதி
திருப்பூர்
திருப்பூரில் உள்ள தொடக்்கப் பள்ளியில் போதுமான சுகாதார வளாக வசதியின்றி மாணவ-மாணவிகள் சிரமப்படுவதாக கூறி அப்பகுதியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
சுகாதார வளாக வசதி
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக அளித்தனர்.
கொங்கு ரத்த தான மையத்தின் சார்பில் அளித்த மனுவில், 'திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் 22-வது வார்டு கந்தசாமி லே-அவுட்டில் மாநகராட்சி தொடங்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரே ஒரு சுகாதார வளாகம் மட்டுமே பள்ளியில் உள்ளது. தற்போது அந்த சுகாதார வளாகம் பழுதடைந்துள்ளதால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக குழந்தைகள் அவசரம், அவசரமாக சுகாதார வளாகம் செல்ல வேண்டிய சூழ்நிலையால் அவதிப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு உடல் உபாதை ஏற்படுகிறது. இந்த பள்ளியில் போதுமான சுகாதார வளாக வசதி அமைத்து குழந்தைகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில், 'திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம், கொரோனாவுக்கு பிறகு மறு பதிவு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லைசென்சு எடுப்பது, புதுப்பிப்பது போன்ற பணிகளுக்கு இடைத்தரகர்கள் அதிக பணம் வசூலிக்கிறார்கள்.இடைத்தரர்களின் ஆதிக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
திருப்பூர் அண்ணா நகரை சேர்ந்த கோவிந்தசாமி தனது உறவினர்களுடன் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், ' எனக்கு பாத்தியப்பட்ட 71 சென்ட் இடம் நெருப்பெரிச்சல் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தில் திருமண மண்டபம் கட்டி கடந்த 23 ஆண்டுகளாக வைத்துள்ளேன். இந்தநிலையில் தனியார் ஒருவர் தவறான ஆவணங்களை காட்டி கடந்த 5-ந் தேதி, மண்டபம், வீடு பகுதியில் கம்பிவேலி அமைத்து மிரட்டுகிறார்கள். எங்கள் நிலத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
வீட்டுமனை பட்டா
தமிழ்நாடு அன்னை இந்திரா காங்கிரஸ் பனியன், ஜின்னிங், பவர்லூம், கட்டிடம், பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில், 'திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீடுகளில் குடியிருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த பரமசிவம் உள்ளிட்டவர்கள் அளித்த மனுவில், '40-வது வார்டு பகுதியில் கவுன்சிலரின் கணவர் தான் பணி செய்கிறார். பெண் கவுன்சிலருக்கு பதிலாக கணவர், உறவினர்கள் நிர்வாகத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். இங்கு சுகாதார பணியில் குறைபாடு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
குளத்தை பாதுகாக்க வேண்டும்
குன்னத்தூர் காவுத்தம்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மூர்த்தி அளித்த மனுவில், 'ஊத்துக்குளி தாலுகா எருமைக்காரன்பாளையத்தில் 3 ஏக்கர் 62 சென்ட் இடம் தரிசு மற்றும் கல்லாங்குத்து நிலம் என்று வருவாய் ஆவணத்தில் உள்ளது. அதை நத்தம் நிலமாக வகை மாற்றம் செய்தால் இலவச வீட்டுமனைப்பட்டா மக்களுக்கு வழங்க முடியும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
அவினாசியை சேர்ந்த மணிமேகலை என்ற மூதாட்டி அளித்த மனுவில், 'எனது பேத்தி மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாவார். பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். குறைந்த வருமானத்தில் வாடகை வீட்டில் வசிப்பது சிரமமாக உள்ளது. அவினாசியில் அரசின் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கி உதவ வேண்டும்' என்று கூறியுள்ளார்.
நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தினர் அளித்த அளித்த மனுவில், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள நஞ்சராயன் குளத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.