பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
திருப்பூரில் கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற பெண், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஸ்கூட்டரில் சென்றனர்
திருப்பூர் மிஷன் வீதியை சேர்ந்தவர் முகமது இசாக் (வயது 60). எலெக்ட்ரீசியனாக உள்ளார். இவருடைய மனைவி ராபியதுல் பசிரியா (58). நேற்று காலை இருவரும் பெருமாநல்லூருக்கு சென்று விட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை முகமது இசாக் ஓட்ட, ராபியதுல் பசிரியா பின்னால் அமர்ந்து இருந்தார்.
இவர்கள் திருப்பூர் குமரன் ரோட்டில் நகர கூட்டுறவு வங்கி முன் காலை 9 மணியளவில் வந்தனர். அப்போது பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையம் நோக்கி சென்ற அரசு பஸ், ஸ்கூட்டரின் பக்கவாட்டில் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். ராபியதுல் பசிரியா மீது பஸ்சின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். முகமது இசாக் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
டிரைவர் கைது
தன் கண்முன்னே மனைவி பலியானதை கண்ட முகமது இசாக் கண்ணீர் சிந்தினார். இது அங்கிருந்தவர்களை கலக்கமடைய செய்தது. தகவல் அறிந்ததும் வடக்கு போலீசார் ராபியதுல் பசிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான தாராபுரம் சின்ன நெகமத்தை சேர்ந்த முத்து மாணிக்கத்தை (52) கைது செய்தனர். இந்த சம்பவத்தால் குமரன் ரோட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.