கலாசார சீரழிவை தடுக்க கடிவாளம் போடப்படுமா?


கலாசார சீரழிவை தடுக்க கடிவாளம் போடப்படுமா?
x
திருப்பூர்


பின்னலாடை தயாரிப்பில் உலக அளவில் பிரசித்தி பெற்று வந்தாரை வாழ வைக்கும் ஊராக மட்டுமில்லாமல் அரசுக்கு அன்னிய செலாவணியை அள்ளி வழங்கிய காரணத்தால் டாலர் சிட்டி என்ற பெயரையும் திருப்பூர் தாங்கி நிற்கிறது. உழைப்புக்கு பெயர் போன இந்த மாநகரில் படிக்காதவர்களும் பிழைத்துக்கொள்ள முடியும். அதன்காரணமாகத்தான் தமிழகத்தின் வெளிமாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேடந்தாங்கலாக திருப்பூர் விளங்கி வந்தது.

பனியன் சார்ந்த தொழில்துறையினர் தங்கள் வாழ்க்கையை தொழிலாளியாக தொடங்கி முதலாளியாக ஏற்றம் பெற்றனர். தொழில் வளர்ச்சியின் காரணமாகவே பல்லடம் தாலுகாவுக்குள் ஒரு பகுதியாக இருந்த திருப்பூர் இன்று மாவட்டத்தின் தலைநகராக, மாநகராட்சியாக மிளிர்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்ததால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருப்பூரை நோக்கி படையெடுத்தனர். வர்த்தக தொடர்பு காரணமாக வெளிநாட்டினரும் இங்கு வந்து செல்கிறார்கள்.

மதுபானம் இலவசம்

இத்தனைக்கும் காரணம் இங்குள்ள தொழில் வளர்ச்சி தான். நாகரிகத்துக்கு ஏற்ப தொழில்துறையில் பல்வேறு நவீனங்களை புகுத்தி மேம்பாடு கண்டாலும், மக்களின் கலாசாரம், பண்பாடு கெடாமல் பாதுகாக்கப்பட வேண்டியது நம் எதிர்கால தலைமுறையினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். தொழில் வளர்ச்சியால் நகரம் சென்னை, கோவை போன்ற மாநகரங்களுக்கு போட்டி போடும் வகையில் வளர்ச்சி பெற்றாலும், சமீபகாலமாக திருப்பூர் மாநகரில் பாரம்பரிய கலாசாரங்களை சீரழிக்கும் நிகழ்வுகள் மெல்ல மெல்ல தலைதூக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு முத்தாய்அமைந்தது திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள டுவின் பெல் ஓட்டலின் விளம்பரம் தான். 17-ந் தேதி (நேற்று) இரவு டிஜே பார்ட்டி ஓட்டலில் நடப்பதாகவும், அதில் பெண்களுக்கு அனுமதி இலவசம், மதுபானம் இலவசம் என்ற வாசகத்தை கண்டதும் அனைத்து மக்களும் அதிர்ந்து போனார்கள். அரசியல் கட்சியினர், பல்வேறு தன்னார்வ அமைப்பினர், இந்து அமைப்பினர், மாதர் சங்கத்தினர் என்று கடும் கண்டனங்கள் எழுந்தது. மாநகர மேயர், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆகியோரும் சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தை கண்டித்தனர். அதன் தொடர்ச்சியாக விளம்பரம் வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரிய ஓட்டல் நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து அறிவித்தது.

தலைகுனிவு

விளம்பரப்படுத்தியதால் தான் இதுபோன்ற கலாசார சீரழிவு நிகழ்ச்சி மக்களின் பார்வைக்கு வந்துள்ளது. ஆனால் மாநகரில் இதுபோன்ற இரவு விருந்து நிகழ்ச்சிகளும், குறிப்பாக இளம்பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் நடந்து வருவதாகவே தெரிவிக்கிறார்கள். மேலைநாட்டு கலாசாரம் எவ்வளவு தான் நம்மை ஆட்கொண்டு விட்டாலும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் மது அருந்துவது, சிகரெட் புகைப்பது என்பதை இன்னும் சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் தான் இருக்கிறது.

ஆனால் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவரை திருப்திப்படுத்தும் வகையில் மாநகரில் இதுபோன்ற ஓட்டல்கள் நிகழ்ச்சியை நடத்தும்போது, அந்த நிகழ்ச்சியில் என்னதான் இருக்கிறது, அதில் பங்கேற்றுத்தான் பார்க்கலாமே என்ற எண்ணம் இங்குள்ள இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் தோன்றுவது இயல்பு. அவ்வாறு அவர்கள் சென்றுவிட்டால் மதுபோதையில் அவர்கள் நிலைதடுமாறினால் அவர்களுக்கு மட்டுமில்ல. அவர்கள் சார்ந்த ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் தலைகுனிவை ஏற்படுத்தும்.

சமூக விரோத செயல்கள்

ஏற்கனவே மாநகரில் உள்ள சிறுவர்களிடம் கஞ்சா பழக்கம் பரவி வருவதை மாநகர போலீசார் கண்டறிந்து சோதனை நடத்தி கஞ்சாவையும் பறிமுதல் செய்து வருகிறார்கள். போதை வஸ்துகள் புழக்கத்தை கட்டுப்படுத்த மாநகர போலீசார் திணறி வருகிறார்கள். சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி வழிப்பறியில் தொடங்கி கொள்ளை சம்பவம் வரை ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

அதுபோல் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசார சம்பவங்களும் நடந்து காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்கள். திருப்பூரை பொறுத்தவரை இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகம். அவர்களை குறிவைத்தே இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நடக்கிறது.

கண்காணிப்பு

இதுபோன்ற ஆபத்தான காலகட்டத்தில் தான் சொகுசு ஓட்டல்களில் நடக்கும் மதுவிருந்து நிகழ்ச்சிகளும் எதிர்காலத்தில் கலாசார சீரழிவுக்கு வித்திடும். முளையிலேயே இதுபோன்ற நிகழ்வுகளை கிள்ளி எறிய வேண்டியது திருப்பூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், காவல்துறையினரின் முக்கிய கடமையாகும். கலாசார சீரழிவை தடுப்பதில் மக்கள் அனைவருக்கும் பொறுப்பு உண்டு. இதுபோன்ற நிகழ்வுகள் எட்டிப்பார்க்காத வகையில் திருப்பூர் மாநகரில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கடிவாளம் போட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story