மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; பெண் பலி


மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; பெண் பலி
x
திருப்பூர்


திருப்பூரில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சாமி தரிசனம் செய்தனர்

கோவை குனியமுத்தூர் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 64). இவரது மனைவி காந்திமதி (58). இவர்கள் திருப்பூர் முத்தணம்பாளையத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய மோட்டார்சைக்கிளில் வந்தனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் கோவை புறப்பட்டனர். திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள ஆட்டோ கியாஸ் பங்க் அருகே வந்தபோது அவர்களுக்கு பின்னால் கார் ஒன்று மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்தக் கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

பெண் பலி

அதில் ராமதாசுக்கு தலை, கை, கால்களில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. பின்னால் அமர்ந்திருந்த காந்திமதி தூக்கி வீசப்பட்டதில் காருடன் சேர்ந்து இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் அருகில் இருந்த மின் கம்பத்தில் கார் மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே காந்திமதிக்கு இரு கால்களும் துண்டானது. வலி தாங்க முடியாமல் துடித்தார். அவ்வழியாக சென்றவர்களிடம் கணவரையும், என்னையும் காப்பாற்றுங்கள் என்று கண்ணீர் விட்டு இருகரம்கூப்பி கதறி அழுதார். ஆனால் அவ்வழியாக செல்பவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து நின்றனரே தவிர யாரும் அவர்களை காப்பாற்ற முன்வரவில்லை. இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ராஜசேகரன் அங்கிருந்து தப்பிஓடி விட்டார்.

அங்கிருந்த ஒரு சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அனுப்ப முயற்சிக்கும் போது காந்திமதி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை ஆஸ்பத்திரியில் ராமதாஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story