கிணற்றில் மூழ்கி புதுப்பெண் சாவு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் மூழ்கி புதுப்பெண் பரிதாபமாக இறந்தார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கோ.மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கரன் மனைவி மாரீஸ்வரி (வயது 25). இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர்கள் கேரளாவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சொந்த ஊரான கோ.மருதப்பபுரத்தில் கோவில் திருவிழா நடப்பதால், அதில் கலந்து கொள்வதற்காக வந்தனர்.
நேற்று முன்தினம் மாலை மாரீஸ்வரி குடும்பத்தினருடன் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அவர்கள் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மாரீஸ்வரி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவருடன் மேலும் 2 பெண்களும் தவறி விழுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். அப்போது 2 பேரை உயிருடன் மீட்டனர். மாரீஸ்வரியை காப்பாற்ற முடியவில்லை. அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றில் இருந்து மாரீஸ்வரி உடலை மீட்டனர். சின்ன கோவிலாங்குளம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரீஸ்வரிக்கு திருமணம் ஆகி 15 நாட்களே ஆவதால் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் ஹஸ்ரத் பேகம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் ேசாகத்தை ஏற்படுத்தியது.