கிணற்றில் பிணமாக மிதந்த பட்டதாரி பெண்
தாராபுரம் அருகே பட்டதாரி பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம்பெண்
குண்டடத்தை அடுத்த குள்ளாய்பாளையத்தை சேர்ந்தவர் சுகுமார். கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி லாவண்யா (வயது 27). பி.காம் பட்டதாரி. இவர்கள் இவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லாவண்யா பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு அவர்கள் செல்போனில் பேசி வந்தபோது இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு லாவண்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுகுமார் தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வந்தார். அன்று முதல் கணவன்-மனைவிக்கு இடையே தினமும் சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் லாவண்யா நேற்று அதிகாலையில் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
முற்றுகை
தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று லாவண்யாவின் உடலை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் லாவண்யாவின் தந்தை மாரியப்பன் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசனிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஆர்.டி.ஓ. மற்றும் போலீசார் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே லாவண்யாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது கணவர் சுகுமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறி லாவண்யாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
லாவண்யாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் இது குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.