டிராக்டர் மீது லாாி மோதல்; பெண் பலி
திண்டிவனம் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விவசாயி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்
திண்டிவனம்
விவசாயி
திண்டிவனம் அருகே உள்ள பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன்(வயது 40). விவசாயியான இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் தனது நிலத்தில் அறுவடை செய்த விளை பொருட்களை தொழிலாளர்கள் மூலம் டிராக்டரில் ஏற்றிக்கொண்டு திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்றார். அங்கு விளைபொருட்களை இறக்கி விட்டு மீண்டும் வீடு நோக்கி அதே டிராக்டரில் புறப்பட்டார்.
டிராக்டரை தாமோதரன் ஓட்டினார். தொழிலாளர்கள் பாதிரி கிராமத்தை சேர்ந்த விசாலாட்சி(40), மங்கை(50), காளியப்பன்(40) ஆகியோர் டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த டிரெய்லரில் அமர்ந்து இருந்தனர்.
பெண் பலி
பாஞ்சாலம் கிராமம் அட்டைப்பெட்டி தயாாிக்கும் தனியார் தொழிற்சாலை அருகே வந்தபோது பொள்ளாச்சியில் இருந்து இளநீர் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, டிராக்டர் டிரெய்லரின் பின்னால் மோதியது.
இதில் நிலை தடுமாறிய டிராக்டர் சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிராக்டர் டிரெய்லரில் அமர்ந்திருந்த விசாலாட்சி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
3 பேர் படுகாயம்
மேலும் படுகாயம் அடைந்த தாமோதரன், மங்கை, காளியப்பன் ஆகிய 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இ்ந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த ரோசணை போலீசார் விசாலாட்சியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான டிராக்டர், டிரெய்லரை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.