பாப்பாரப்பட்டி சின்ன ஏரி அளவீடு செய்யும் பணிபோலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சின்ன ஏரி சுமார் 35 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் ஆக்கிரமிப்பு காரணமாக தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரை, முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடந்தது. இதையடுத்து சின்ன ஏரியை தூர்வார வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சின்ன ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தி ஏரியை சுற்றி நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை தெருவிளக்கு அமைத்து கம்பிவேலி மற்றும் கைப்பிடி கிரில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான ஏலம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி மூலம் விடப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தூர்வாரும் பணியை தொடங்கும் வகையில் ஏரி முழுவதும் அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது. இந்த பணியில் வருவாய் துறையினர் மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலர்கள் ஈடுபட்டனர். பாப்பாரப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் பிருந்தா, செயல் அலுவலர் கோமதி, கிராம நிர்வாக அலுவலர் முருகன் மற்றும் நில அளவையர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்து எல்லை கல்களை நட்டனர்.