தண்ணீரின்றி விளையாட்டு மைதானம்போல் காட்சி அளிக்கும் ஏரி-குளங்கள்


தண்ணீரின்றி விளையாட்டு மைதானம்போல் காட்சி அளிக்கும் ஏரி-குளங்கள்
x

பட்டுக்கோட்டை பகுதியில் தண்ணீரின்றி ஏரி, குளங்கள் விளையாட்டு மைதானம்போல் காட்சி அளிக்கின்றன. பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பகுதியில் தண்ணீரின்றி ஏரி, குளங்கள் விளையாட்டு மைதானம்போல் காட்சி அளிக்கின்றன. பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

கல்லணைக்கால்வாய்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 போகம் நெல் விளையும். குறுைவ, சம்பா, தாளடி ஆகிய 3 போக நெல் சாகுபடி செய்யும் அதே வேளையில் கோடை காலத்தில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்தி கோடை சாகுபடியும் பரவலாக நடைபெற்று வருகிறது. டெல்டா பகுதிகள் காவிரி நீரை விவசாயத்துக்கு பெரிதும் நம்பி உள்ளன. இந்த ஆண்டு காவிரியில் நீர் வரத்து குறைந்து விட்டதால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு காவிரி நீரை கொண்டு சேர்ப்பதில் கல்லணைக்கால்வாய் முக்கிய பாசன ஆறாக திகழ்கிறது.

பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம்

இந்த நிலையில் தற்போது கல்லணைக்கால்வாயில் போதிய தண்ணீர் வராததாலும், மழை இல்லாததாலும் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஏரி-குளங்கள் வறண்டு விளையாட்டு மைதானம் போல் காட்சி அளிப்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இதே நிலை நீடித்தால் நீண்ட கால சாகுபடி பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என வேளாண் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்திடம் இருந்து காவிரி தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசு ஒரு புறம் சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் மறுபுறம் விவசாயிகள் சாகுபடிக்கு தண்ணீர் இன்றி தவித்து வருகிறார்கள்.

வறண்ட ஏரி, குளங்கள்

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் வராததால் இந்த ஆண்டு முழுமையான அளவு சாகுபடி செய்ய முடியாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் 126 ஏரிகளும், 310 பாசன குளங்களும் உள்ளன. ஆனால் இதில் பெரும்பாலான ஏரி- குளங்கள் வறண்டு வருகின்றன.

விவசாயிகள் வேதனை

இதே சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் ஆடு, மாடுகள் குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் போய்விடும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் நீண்ட கால சாகுபடி நெற்பயிர் ரகங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நல்ல மழை பெய்ததாலும் கல்லணைக் கால்வாயில் தண்ணீர் வந்ததாலும் ஏரி, குளங்கள் நிரம்பி வழிந்தன.

சாகுபடியும் நல்ல முறையில் நடந்தது. 2,200 எக்டேர் குறுவை சாகுபடியும், 6,800 எக்டேர் சம்பா சாகுபடியும் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் வருவதை பொறுத்துதான் சாகுபடி நடைபெறும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைந்து வரும் நிலையில் மழையும் போதிய அளவு பெய்யாதது விவசாயிகளிடையே கவலையை அதிகரித்துள்ளது.


Next Story