தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள் விவசாயிகள் மகிழ்ச்சி
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் சிதம்பரம் கொள்ளிடம் வடிநில பாசன கோட்டம், விருத் தாசலம் வெள்ளாறு பாசன கோட்டம் ஆகியவை உள்ளது. இதில் கொள்ளிடம் வடிநில பாசன கோட்டத்தில் 18 ஏரிகளும், வெள்ளாறு பாசன கோட்டத்தில் 210 ஏரிகள் என மொத்தம் 228 ஏரிகள் உள்ளன.
இதில் குறிப்பாக வீராணம் ஏரி, வெலிங்டன், வாலாஜா உள்ளிட்ட பெரிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் வேகமாக நிரம்பி வருகிறது. வீராணம் ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடி ஆகும். தற்போது, அதில் 45.20 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 800 கன அடி தண்ணீர் வருகிறது. 1400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு 64 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
வெலிங்டன் ஏரியின் மொத்த கொள்ளளவான 29.72 அடியில் தற்போது 22.20 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 2918 கன அடி தண்ணீர் வருகிறது. இதேபோல் வாலாஜா உள்ளிட்ட பல்வேறு ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 228 ஏரிகளில் 25 ஏரிகள் முழுமையாக நிரம்பி விட்டன. 75 சதவீதத்திற்கு மேல் 24 ஏரிகளும், 50 சதவீதத்திற்கு மேல் 40 ஏரிகளும், 25 சதவீதத்துக்கு மேல் 103 ஏரிகளும், 1 முதல் 25 சதவீதம் வரை 18 ஏரிகளும் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து இந்த ஏரிகளை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.