தொரப்பள்ளி ஏரிக்கரை உடையும் அபாயம்
ஓசூர் அருகே ஏரிக்கரை உடையும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர்
ஓசூர் அருகே ஏரிக்கரை உடையும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மழை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அப்பகுதியில் விவசாயிகள் தென்னை, வாழை, நெல் மற்றும் மலர்கள் ஆகியவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக நிரம்பாத இந்த ஏரி, தற்போது சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக நிரம்பி உள்ளது.
இதனால் ஏரிக்கரையின் மையப்பகுதியில் தாழ்வான இடத்தில் தண்ணீர் வெளியேறி கரையில் அரிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் கரை சேதமடைந்தது. தொடர்ந்து அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால் ஏரிக்கரை உடையும் அபாய நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி பகுதிக்கு சென்று சேதமடைந்த கரையை பார்வையிட்டனர்.
கோரிக்கை
ஆனால் கரையில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதற்கு மாறாக ஏரியின் கடைக்கோடியில் பொக்லைன் எந்திரம் மூலம் பாதையை ஏற்படுத்தி ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதன் காரணமாக ஏரியில் உள்ள தண்ணீர் வெளியேறி, வீணாக தென்பெண்ணை ஆற்றுக்கு செல்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேறினால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தால் சேதமான ஏரிக்கரை உடைந்து விவசாய நிலங்கள் மற்றும் கிராமத்திற்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, சேதமடைந்த ஏரிக்கரையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.