லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்


லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்
x

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அவர்கள், ‘அரோகரா’ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவண்ணாமலை



கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அவர்கள், 'அரோகரா' கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் வெவ்வேறு வாகனங்களில் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

தீபத்திருவிழாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான வெள்ளி ரதம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. வெள்ளி ரதத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், வெள்ளி இந்திர வாகனத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி விமானங்களில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளும் மாடவீதியில் வீதியுலா சென்றனர். முன்னதாக பகலில் 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது.

தேரோட்டம்

விழாவின் 7-ம் நாளான நேற்று பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேர்கள் தனித்தனியாக இழுக்கப்பட்டது. முன்னதாக 5 தேர்களும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. நேற்று அதிகாலையில் கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

தேரை வடம் பிடித்து இழுப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அதனால் கோவில் மாடவீதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலையாகவே காட்சியளித்தது. காலை 6.47 மணிக்கு விநாயகர் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இந்த தேர் மாடவீதியை சுற்றி வந்து காலை 10.20 மணி அளவில் விநாயகர் தேர் நிலையை அடைந்தது.

முருகர் தேர்

அதைத்தொடர்ந்து காலை 11 மணி அளவில் முருகர் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பக்தர்கள் முருகனுக்கு 'அரோகரா, கந்தனுக்கு அரோகரா' என்று பக்தி கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்து இழுத்தனர். முருகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் போது நூற்றுக்கணக்கான போலீசார் தேரை சுற்றி கயிறு கட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தேரின் பின்புறம் தேருக்கு கட்டை போடும் நபர்களை போலீசார் வைத்திருந்த கயிறு நெரித்து தேருக்கு கட்டை போட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் தேரின் பின்புறம் கயிறை நெருக்கி பிடிப்பதை தவிர்த்தனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பிற்பகல் 2.50 மணிக்கு முருகர் தேர் நிலைக்கு வந்தது.

அருணாசலேஸ்வரரின் பெரிய தேர்

அதன் பின்னர் அருணாசலேஸ்வரரின் பெரிய தேர் இழுப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. தேரோட்டத்தை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பெண்கள் ஒருபுறமும், ஆண்கள் ஒரு புறமும் தேர் இழுப்பதற்காக தயார் நிலையில் நின்றனர்.

மாலை 3.47 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின்னர் பெரிய தேரோட்டம் தொடங்கியது. அப்போது பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு மாடவீதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் வெள்ளத்தில் பெரிய தேர் அசைந்தாடி சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மாடவீதிகளில் குவிந்திருந்தனர்.

பெரிய தேர் நிலைக்கு வந்ததும் பராசக்தி அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இந்த தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர். அதைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்பட்டது.

கரும்பு தொட்டில்



முன்னதாக நேற்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து அதில் குழந்தைகளை வைத்து மாட வீதியில் வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு கிராமங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து குவிந்தனர். இதனால் திருவண்ணாமலையில் உள்ள மடங்கள், சத்திரங்கள், தங்கும் விடுதிகள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.

6-ந்தேதி மகா தீபம்

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது.

மகா தீபத்தை காண இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அனைத்து அடிப்படை பணிகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் மூலம் செய்யப்பட்டு வருகிறது.


Next Story