திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்


திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
x

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 4.44 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 5.45 மணியில் இருந்து ½ மணி நேரம் திடீரென மழை பெய்தது.

மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு மட்டுமின்றி இன்று காலை வரை பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர். அதுமட்டுமின்றி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.


அம்மணி அம்மன் கோபுர வாசலில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சிறுவர் முதல் முதியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிதவித்தனர். போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர்.

தீபம் ஏற்றி வழிபாடு


மேலும் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை பவுர்ணமி உள்ளதால் இன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Next Story