திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்


திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
x
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

கிரிவலம்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவில் நேற்று அதிகாலை பரணி தீபமும், சிகர நிகழ்ச்சியாக மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

இதனையொட்டி சிறப்பு பஸ்கள், ரெயில்கள் மூலம் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

அவ்வாறு வந்த பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். கிரிவலப்பாதையில் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.

பரவசம்

மாலையில் மகா தீபம் ஏற்றியபோது கிரிவலம் சென்றவர்கள் அந்தந்த இடங்களிலேயே நின்று மலையை பார்த்து கைகளை குவித்து வணங்கினர். தீப ஒளியை பார்த்ததும் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பக்தி பரவசமடைந்தனர். ஆங்காங்கே அவர்கள் கற்பூரம் ஏற்றி வணங்கினர். பின்னர் தொடர்ந்து கிரிவலம் சென்றனர். பலர் வீடுகளிலும் விளக்கேற்றினர். மேலும் ஏராளமான பக்தர்கள் காலை முதலே முடிகாணிக்கை செலுத்தினர். குழந்தைபேறு கிடைத்த தம்பதியர் குழந்தையை கரும்பு தொட்டிலில் வலம் வந்து றேநர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஐகோர்ட்டு நீதிபதி மகாதேவன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், கலெக்டர் முருகேஷ், வேலூர் சரக டி.ஐ.ஜி.சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தி.மு.க. மருத்துவரணி மாநில துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மு.பெ.கிரி எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், நகராட்சி ஆணையர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனுவாசன், நகர மன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், ஒன்றிய குழு தலைவர் கலைவாணிகலைமணி, மாவட்ட துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன், அருணை கன்ஸ்ட்ரக்சன் துரைவெங்கட், அ.தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் டிஸ்கோகுணசேகரன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சுனில்குமார், நகர செயலாளர் ஜெ.செல்வம், நகர எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் இளஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story