முருகர் கோவிலில் லட்சதீப திருவிழா


முருகர் கோவிலில் லட்சதீப திருவிழா
x

காங்கேயநல்லூர் முருகர் கோவிலில் லட்சதீப திருவிழா நடைபெற்றது.

வேலூர்

காட்பாடி தாலுகாவில் காங்கேயநல்லூர் உள்ளது. இது திருமுருக கிருபானந்தர் வாரியார் சுவாமிகள் அவதரித்த திருத்தலம் ஆகும். இங்கு சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் முருகப்பெருமானுக்கு லட்சதீப திருவிழா நடைபெறும். அதுபோல இந்த ஆண்டு லட்சதீப திருவிழா நடந்தது.

பகல் 3 மணிக்கு சாமிக்கு மகா அபிஷேகம், 6 மணிக்கு மகா தீபாராதனை லட்ச தீபக்காட்சி நடந்தது. வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் பெண்கள் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

இரவு 8 மணிக்கு வாரியார் சுவாமிகளின் தம்பி மகன் வாதவூரனின் செஞ்சொல் விரிவுரை நிகழ்ச்சியும், 9 மணிக்கு டி.கே.எஸ். கலைவாணன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சியும் நடந்தது.

இதில் வாரியார் சுவாமிகளின் தம்பி மகன் புகழனார், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அசோகன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கே.பி.ரமேஷ், சாமுண்டீஸ்வரி குணாளன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இரவு சாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. லட்சதீப திருவிழாவில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமியை வழிபட்டனர்.

கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வாரியார் சுவாமிகளின் ஞானத்திருவளாகமும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

திருவிழாவை முன்னிட்டு காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story