வடகாடு பகுதியில் ஆடுகளை பறிகொடுத்தவர்கள் புலம்பல்
வடகாடு பகுதியில் ஆடுகளை பறிகொடுத்தவர்கள் புலம்பி வருகின்றனர்.
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வரும் தொடர் ஆடு திருட்டு சம்பவங்களால் இப்பகுதி மக்கள் மிகுந்த வேதனைப்பட்டு வருகின்றனர். இதுவரை நூற்றுக்கணக்கான ஆடுகளை பறிகொடுத்துள்ள இப்பகுதி மக்கள் வேறு வழியின்றி மிகுந்த வேதனையோடு அருகாமையில் இருக்கும் போலீஸ் நிலையங்களில் சென்று புகார் செய்தும் வருகின்றனர். மேலும் ஒரு சிலர் புகார் கொடுத்து என்ன ஆகப்போகிறது என்று பேசாமல் இருந்து விடுகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் இச்சடி அருகே முள்ளிக்காப்பட்டி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, 2 கார்களில் ஆடு திருடர்களால் பல்வேறு இடங்களில் இருந்து திருடி வரப்பட்ட 46 ஆடுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 5 நபர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்புடைய போலீஸ் நிலையங்களுக்கு 46 ஆடுகள் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து ஆடுகளை பறிகொடுத்த நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆடுகளை இழந்த அதன் உரிமையாளர்கள் தங்களிடம் பறிபோன ஆடுகள் எடை 20 முதல் 25 கிலோ வரை இருக்கும் என்றும் ஆனால் தற்போது கிடைத்திருப்பதோ 2 முதல் 4 கிலோ எடை கொண்ட ஆட்டு குட்டியைத்தான் போலீசார் கொடுத்து இருப்பதாகவும் ஆடுகளை இழந்த அதன் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.