புலம்பி தவிக்கும் புளி வியாபாரிகள்


புலம்பி தவிக்கும் புளி வியாபாரிகள்
x

போதிய விலை கிடைக்காததால் புளி வியாபாரிகள் புலம்பி தவிக்கின்றனர்.

திண்டுக்கல்

ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் புளி தவறாமல் இடம் பிடித்திருக்கும். இது ஒரு சீசனில் கிடைக்கும் உணவு பொருள் ஆகும். முன்பெல்லாம் வனப்பகுதிகளிலும், தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் புளியமரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அவற்றின் தேவை அதிகரித்து வருவதால் விளைச்சல் நிலங்களிலும் புளியமரங்கள் வளர்க்கப்பட்டு புளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

புளி சேகரிப்பு

புளியும், அதில் உள்ள கொட்டைகளும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு போதுமான வருமானம் கிடைத்து வந்தது. புளி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளிடம், வியாபாரிகள் அவர்களின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் வளர்க்கப்படும் புளியமரங்களில் இருந்து புளியை சீசன் காலத்தில் பறித்து விற்பனை செய்வார்கள்.

இதேபோல் விவசாயிகளும் புளியை சேகரித்து சந்தைக்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்வார்கள். இதன் மூலம் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கனிசமான தொகை வருமானமாக கிடைக்கும்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரையை அடுத்த பூசாரிபட்டியில் வசிக்கும் விவசாயிகள் புளி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சீசன் காலத்தில் விவசாயிகளே தங்களின் குடும்பத்தினர் உதவியுடன் புளியமரங்களில் ஏறி புளியை பறித்து சேகரிக்கின்றனர். பின்னர் அவற்றை வீடுகளுக்கு கொண்டு சென்று புளியில் உள்ள ஓடு, கொட்டைகளை நீக்கி சுத்தம் செய்கின்றனர்.

வியாபாரிகள் புலம்பல்

அதன்பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இந்த சந்தைகளுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மூட்டை, மூட்டையாக புளியை வாங்கிச் செல்கின்றனர்.

இதேபோல் மாவட்ட பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலையோரங்களில் வளரும் புளியமரங்களை வியாபாரிகள் ஏலம் எடுத்து அதன் மூலம் கிடைக்கும் புளியை மாவட்ட பகுதிகளில் செயல்படும் சந்தைக்கும், வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைப்பார்கள்.

பொதுவாக புளி சீசன் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இருக்கும். ஆனால் தற்போது சீசன் தொடங்கி 2 மாதங்கள் கடந்த பிறகும் புளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகளும், வியாபாரிகளும் புலம்பி தவிக்கின்றனர்.

விவசாயிகள் கவலை

ஆரம்பத்தில் ஒரு கிலோ புளிக்கு ரூ.60 வரை விலை கிடைத்தது. ஆனால் சில வாரங்கள் கடந்ததும், அதன் விலை படிப்படியாக வீழ்ச்சியடைய தொடங்கியது. அதன்படி தற்போது ஒரு கிலோ புளிக்கு ரூ.45 வரையே விலை கிடைக்கிறது. மேலும் நெடுஞ்சாலையோர மரங்களை ஏலம் எடுத்து புளி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கும் இதே விலை தான் கிடைக்கிறது.

நெடுஞ்சாலையோர மரங்கள் மூலம் வியாபாரிகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 15 டன் அளவில் புளி கிடைக்கிறது. ஆனால் அவற்றுக்கு கிலோவுக்கு ரூ.60 கிடைத்தால் மட்டுமே அவர்களுக்கு கட்டுப்படியாகும். விலை வீழ்ச்சியடைந்ததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

அருள்முருகன் (விவசாயி, பூசாரிபட்டி) :- கடந்த பல ஆண்டுகளாக புளி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். சீசன் காலத்தில் புளி விளைச்சல் அதிகமாக இருக்கும். அப்போது வழக்கத்தைவிட கூடுதலாக வருமானமும் கிடைக்கும். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. முன்பெல்லாம் ஓடு நீக்காத, சுத்தப்படுத்தப்படாத ஒரு கிலோ புளிக்கு ரூ.40 வரை விலை கிடைத்தது. ஆனால் தற்போது ரூ.20 தான் கிடைக்கிறது. இதேபோல் ஓடு நீக்கி, சுத்தப்படுத்தி விற்பனை செய்யும் போது ஒரு கிலோவுக்கு ரூ.55 முதல் ரூ.60 வரை விலை கிடைத்தது. தற்போது ரூ.45 வரை தான் கிடைக்கிறது. விலை வீழ்ச்சியடைந்ததால் எங்கள் பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விலை நிர்ணயம் அவசியம்

ஹரிகிருஷ்ண மூர்த்தி (புளி வியாபாரி, பூசாரிபட்டி) :- கடைகளில் தரமான புளி கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மொத்த வியாபாரிகளான எங்களுக்கு கிலோவுக்கு ரூ.45 தான் கிடைக்கிறது. ஏலம் எடுக்கப்படும் ஒவ்வொரு புளிய மரத்துக்கும் மரத்தில் ஏறுபவர்களுக்கான கூலி, புளியை சுத்தம் செய்வதற்கான கூலி, புளி மூட்டைகளை வாகனங்களில் சந்தைக்கு எடுத்துச்செல்வது என குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவு ஆகிறது. இந்த செலவுகளை ஒப்பிடும் போது தற்போது கிடைக்கும் விலையால் எங்களுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது. இருந்த போதிலும் வேறு வழியின்றி இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

சாந்தி (குடும்ப தலைவி, பூசாரிபட்டி) :- பாசனத்துக்கு முறையாக தண்ணீர் கிடைக்காததால் நெல், காய்கறி உள்ளிட்ட விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. குறைந்த தண்ணீரில் பலன் கொடுக்கும் புளி சாகுபடியில் தான் எங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஈடுபடுகின்றனர். அவர்கள் சாகுபடி செய்து கொண்டு வரும் புளியை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஓடுகளை உடைந்து, விற்பனைக்கு தயார் செய்கின்றோம். ஆனால் புளியை சந்தைக்கு கொண்டு சென்று விற்றால் நாங்கள் எதிர்பார்க்கும் விலை கிடைப்பதில்லை. எனவே விவசாயிகள், வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு புளிக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story